காஞ்சிபுரம்: விடுதிக்கு தாமதமாக வந்ததற்காக பேராசிரியை கண்டித்ததால் பி.இ. மாணவி 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டுவை அடுத்த வாழவச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி என்பவரின் மகள் வைத்தீஸ்வரி (20). அவர் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
அவர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். அந்த விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகள் கல்லூரி முடிந்த பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் விடுதிக்கு வந்துவிட வேண்டும். ஆனால் வைத்தீஸ்வரி இரவு வெகுநேரமான பிறகே விடுதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரை கல்லூரி மற்றும் விடுதி நிர்வாகம் கண்டித்துள்ளது.
ஆனால் அவர் அதன் பிறகும் குறிப்பிட்ட நேரத்திற்கு விடுதிக்கு வராமல் இருந்துள்ளார். இதையடுத்து அவரை போராசிரியை ஒருவர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி விடுதியின் 5வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் குறித்து காஞ்சிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.