20 நாள் கைலாய யாத்திரை புறப்படும் நித்யானந்தா..!: அப்போ ஆண்மை பரிசோதனை?

 Nithyananda Go On Kailash Yatra திருவண்ணாமலை: எங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை என்றும், மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தாவை மாற்றும் எண்ணமும் இல்லை என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.
அருணகிரிநாதரும், இளைய ஆதினமாக உள்ள நித்தியானந்தாவும் நேற்று திடீரென திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தாவின் ஆஸ்ரமத்துக்கு வந்து தங்கினர்.
மதியம் 12.30க்கு அண்ணாமலையாரை வணங்க கோயிலுக்கு இருவரும் வந்தனர். கோயில் நடை சாத்தப்பட்டிருந்ததால் கோயில் கொடிமரம் அருகே உள்ள விநாயகரை இருவரும் வழிபட்டனர்.
பின்னர் மதுரை ஆதீனம் நிருபர்களிடம் பேசுகையில், மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தர், 20 நாள்கள் கையிலாய யாத்திரை புறப்படுகிறார். அவரை வழியனுப்பி வைக்கவே நாம் இங்கு வந்தோம். நமக்கும், நித்யானந்தருக்கும் எந்த கருத்து வேறுபாடோ, பிரச்சனையோ இல்லை. எனவே, எத்தனை எதிர்ப்புகள் கிளம்பினாலும் மதுரை இளைய ஆதீனப் பொறுப்பில் இருந்து அவரை மாற்றும் எண்ணம் நமக்கு இல்லை.
நித்யானந்தர் நம்மை வசியப்படுத்தி விட்டதாகக் கூறுகிறார்கள். என்னை நம்மை வசியப்படுத்தவில்லை. யாராலும் வசியப்படுத்தவும் முடியாது. நமக்குத் தான் மற்றவர்களை வசியப்படுத்தும் ஆற்றல் உள்ளது.
மதுரை ஆதீனத்தில் முதியவர் யாரும் தாக்கப்படவில்லை. ஆதீனத்தில் மரகத லிங்கம் இருப்பதாக கூறப்பட்ட தகவல் பொய்யானது. ஸ்படிக லிங்கம் மட்டுமே உள்ளது. மான், புலித் தோல்கள் எல்லாம் அங்கு இல்லை என்றார்.
பின்னர் திடீரென சீரியஸாகி, முல்லைப் பெரியாறு அணைக்கு தமிழக அரசு போதிய பாதுகாப்பு தர வேண்டும். அணையில் தமிழக அரசு மட்டுமே பராமரிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று பொது விஷயமும் பேசினார்.
கைலாய யாத்திரைக்கு பின் ஆண்மை சோதனை செய்யலாமே-நித்யானந்தா:
இதையடுத்து நித்யானந்தா நிருபர்களிடம் பேசுகையில், என் மீதான ஆர்த்தி ராவின் குற்றச்சாட்டுகள் முழுவதும் பொய்யானவை. தனது மகனை மீட்டுத் தருமாறு மதுரை ஆட்சியரிடம் பெற்றோர் புகார் கொடுத்துள்ளது, அந்த பெற்றோருக்கும், மகனுக்கும் இடையே இருந்த பிரச்சனை. அதை அவர்கள் பேசித் தீர்த்துக் கொண்டார்கள்.
பெங்களூரில் இம்மாதம் 30ம் தேதி ஆண்மைப் பரிசோதனைக்கு ஆஜராகுமாறு போலீஸார் எனக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். நான் கைலாய யாத்திரைக்குச் செல்வது 6 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டது. எனவே, யாத்திரை முடிந்து வந்த பிறகு பரிசோதனைக்கு ஆஜராவதாக போலீஸில் மனு கொடுத்துள்ளோம். இது குறித்த வழக்கில் எனது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விவரங்களைத் தெரிவிப்பார்.
நான் புதன்கிழமை (இன்று) மாலை சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் செல்கிறேன். அங்கிருந்து நேபாளம் சென்று கைலாயம் செல்வேன். என்னுடன் கைலாயத்தில் 200 பக்தர்களும் 3 வாரம் தங்கியிருந்து வழிபாடு செய்ய உள்ளனர்.
ஆதீன விதிமுறைகளை கடைப்பிடித்து, முறைப்படிதான் மதுரை ஆதீனமாக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். என்னை தேர்வு செய்ததில் எந்த முறைகேடும் இல்லை.
என் பெயரைப் பயன்படுத்தி யாரும் புதிய நிறுவனமோ, ஹோட்டலோ, டிராவல் ஏஜென்சியோ தொடங்கக் கூடாது என்று என் பக்தர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளேன் என்றார் நித்யானந்தர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: