நெல்லூரில் தீப்பிடித்து எரிந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்... உயிரோடு கருகி 50 பேர் பலி!

 Fire On Tamil Nadu Express 25 Dead Several Injured
சென்னை: டெல்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்துக் கொண்டது. இதில் ஒரு பெட்டி முழுக்க எரிந்து சாம்பலானது. இந்த திடீர் தீவிபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியிலிருந்து சென்னை வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் ரயில் நிலையத்தை இந்த ரயில் வந்தடைந்தது.
சில நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்ட இந்த ரயில் இன்று காலை ஏழே கால் மணிக்கு சென்னைக்கு வரவிருந்தது. ஆனால் நெல்லூரிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரயிலின் எஸ் 11 பெட்டியில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.
அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் நல்ல தூக்கத்தில் இருந்துள்ளனர். தீயைப் பார்த்து பதறியடித்து எழுந்த சில பயணிகள் கூச்சலிட்டு மற்றவர்களை எழுப்ப முயன்றனர். மேலும், ரயிலிலிருந்து தப்பும் வழியையும் பார்த்தனர்.
ரயிலில் இருந்த இரண்டு கதவுகளையும் அவர்களால் திறக்க முடியவில்லை. இதையடுத்து அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுக்க முயன்றபோது அது செயல்படவில்லை. இதையடுத்து பக்கத்து கோச்சில் இருந்த பயணிகள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதையடுத்து அவர்களின் உதவியுடன் சில பயணிகள் தப்பி வெளியேறினர்.
ஆனால், மளமளவென்று கொழுந்து விட்டு எரிந்த தீ பெட்டி முழுவதும் பரவி விட்டது. இதனால் பெரும்பாலான பயணிகள் தீயில் சிக்கிக் கொண்டனர். சற்று நேரத்தில் பெட்டி முழுக்க தீப் பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இதில் பலர் கருகிப் பலியானார்கள்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர். அப்போது முதலில் தீயில் கருகிய நிலையில் 25 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. தீக்காயங்களுடன் 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டன. தீ முற்றிலுமாக அணைக்கப்பட்ட நிலையில் மேலும் பலரது கருகிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
தீவிபத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் யார் யார் என்பது இதுவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்பெட்டியில் பயணம் செய்தவர்களில் முக்கால்வாசிப் பேர் அப்படியே பெட்டியோடு கருகிப்போய்விட்டது அனைவரது நெஞ்சையும் உறைய வைத்திருக்கிறது.
சம்பவ இடத்தில் நெல்லூர் ஆட்சியர் ஸ்ரீதர் மீட்புப் பணிகளை மேற்கொண்டார். ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: