அமெரிக்காவில் வரலாறு காணாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. பல்வேறு நகரங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டாக உள்ளது. வாஷிங்டனில் 105 பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. மேலும் கோடை புயலால் வாஷிங்டனில் ரயில் ஒன்று தடம் புரண்டது. இப்படி கொளுத்தும் வெயிலைத் தாங்க முடியாமல் 30 பேர் பலியாகியுள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள்.
ஒஹாயோவில் தங்கள் வீடுகளில் இறந்து கிடந்த 3 பேருக்கு இதய நோய் இருந்தாலும் அவர்கள் வெப்பம் தாங்க முடியாமல் இறந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தவிர விஸ்கான்சினில் 3 பேரும், டென்னிசியில் 2 பேரும், பென்னிசில்வேனியாவில் 3 பேரும், மேரிலேண்டில் 9 பேரும் மற்றும் சிகாகோவில் 10 பேரும் என மொத்தம் 30 பேர் இறந்துள்ளனர்.
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான அனல்காற்று வீசுவதால் மக்கள் நீர் நிலையங்களில் கிடையாய் கிடக்கின்றனர். மேலும் ஏசியில் இருப்பதற்காக சினிமா தியேட்டருக்கு சென்றும், டியூப் ரயில்களில் பயணித்தும் வெயிலில் இருந்து தப்பிக்க முயற்சி செய்து வருகின்றனர்.