சென்னை: பஹ்ரைனுக்கு வேலைக்கு சென்று அங்கிருந்து நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழக தொழிலாளர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுகிறார்கள்.பஹ்ரைன் நாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் அங்கிருந்து நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ஒப்பந்த பிரச்சனை, விசா காலாவதியானது, சுற்றுலா விசாவில் சென்று வேலை பார்த்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியர்கள் பஹ்ரைனில் வேலை பார்க்கவும் முடியாமல், தாயகம் திரும்பவும் முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.
அவ்வாறு நாடு திரும்ப முடியாமல் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த பசுபதி மாரியப்பன் என்ற இரும்பு பட்டறை தொழிலாளி மனவேதனையால் பஹ்ரைனில் உள்ள பூங்கா ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து நாடு திரும்ப முடியாமல் தற்கொலை செய்து கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்தது.
இந்நிலையில் தமிழக அரசு ஊழியரான பசுபதியின் சகோதரர் சங்கர் பஹ்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய தொழிலாளர்களுக்காக ஆன்லைனில் ஆதரவு திரட்டினார். ஆன்லைனில் ஆதரவு குவிந்தது பஹ்ரைன் அரசுக்கு பிரச்சனையானது. இதையடுத்து ஊர் திரும்ப தடை செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்க பஹ்ரைன் அரசு தீர்மானித்துள்ளது.
பஹ்ரைன் நீதிமன்றத்தில் இந்திய தொழிலாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதன் மூலம் பஹ்ரைனில் தவித்து வந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஊர் திரும்பவிருக்கின்றனர்.