
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்கவும், சுத்தம் செய்யவும் தமிழகத்தை அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் உறுதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான குழு அணையை ஆய்வு செய்து கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அது தனது அறிக்கையில் அணை உறுதியாக உள்ளது என்றும், அணையின் நீர்மட்டத்தை தாராளமாக உயர்த்தலாம் என்றும் பரிந்துரைத்தது. அந்த குழுவின் பரிந்துரையை ஏற்று அணையின் நீர்மட்டத்தை உயர்த்துமாறு கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரியும், அணையை பராமரிக்க அனுமதிக்கக் கோரியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்த வழக்கு கடந்த மே மாதம் 4ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கேரள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் ஹரீஷ் சால்வே, ராஜீவ் தவன் ஆகியோர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அரசியல் கருத்தொற்றுமை ஏற்படுத்தவே கேரளா விரும்புகிறது என்று தெரிவித்தனர். இதையடுத்து அணை பிரச்சனை குறித்து இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுமாறு வலியுறுத்தி வழக்கு விசாரணை ஜூலை 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஏ.எஸ். ஆனந்த் குழு அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கேரள அரசு கடந்த வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்கவும், சுத்தம் செய்யவும் தமிழகத்தை கேரள அரசு அனுமதிக்கக் கோரிய தமிழக அரசின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்கவும், சுத்தம் செய்யவும் தமிழகத்தை கேரள அரசு அனுமதிக்க வேண்டும். அந்த பணிகள் 3 நபர் கொண்ட குழுவின் மேற்பார்வையில் நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒரு பொறியாளர் மற்றும் மத்திய பணிகள் குழு தலைவரால் நியமிக்கப்படும் பொது நபர் ஒருவர் அந்த கண்காணிப்பு குழுவில் இடம்பெறுவார்கள். மேலும் இந்த வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.