2030ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பப் போகிறது நாசா. அதற்கான ஏற்பாடுகள், ஆய்வுகள் வேகம் பிடித்துள்ளன. இந்த நிலையில் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் விண்வெளி வீரர்களுக்கான சாப்பாடு குறித்த தீவிர ஆய்வுகளும் ஒருபக்கம் விறுவிறுவென நடந்து கொண்டுள்ளன.ஆறு முதல் எட்டு விண்வெளி வீரர்கள் வரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் செவ்வாய் கிரகத்திற்கு முதன் முறையாக ஆட்களை அனுப்பும் முயற்சி என்பதால் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த நிலையில் இவர்களுக்கான சாப்பாடு குறித்துத்தான் இப்போது கவலையுடன் உள்ளது நாசா.
செவ்வாய் கிரகத்திற்கு போவதற்கே ஆறு மாதம் ஆகும். அங்கு போய் 18 மாதங்கள் வரை இருந்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மறுபடியும் அங்கிருந்து பூமிக்குத் திரும்பி வர ஆறு மாதமாகும். எனவே மொத்தமாக கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கான சாப்பாட்டை கையோடு கொண்டு போயாக வேண்டிய நிலை.
ஒரு குடும்பத்துக்கு 3 வருடங்களுக்குத் தேவையான மளிகை சாமான்களை ஒரே பையில் அடைத்துக் கொண்டு வருவதென்றால் எப்படி இருக்கும்... ஜஸ்ட் யோசிச்சுப் பாருங்கள். அந்த நிலையில்தான் இப்போது 'நாசா அண்ணாச்சிகள்' இருக்கிறார்கள்.
இதுகுறித்து செவ்வாய் கிரக உணவு ஏற்பாட்டுக் குழுவில் முக்கிய இடம் பிடித்துள்ள மூத்த விஞ்ஞானி மாயா கூப்பர் கூறுகையில், செவ்வாய் கிரகம் மற்ற கிரகங்களை விட நிச்சயம் வித்தியாசமானது, மேலும் இது தொலைவில் உள்ள கிரகமும் கூட.
தற்போது விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை உணவு சப்ளை செய்து வருகிறோம். ஆனால் செவ்வாய் கிரகத்திற்கும் அதுபோல சாப்பாடு அனுப்பி வைக்க வாய்ப்பில்லை. அது சாத்தியமற்றது என்றார்.
தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் இருப்போருக்கு சாப்பாட்டுக்குப் பிரச்சினையே இல்லை. அவர்களுக்காக 100 வகை சாப்பாட்டு மெனு உள்ளது. அனைத்துமே ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, உறை நிலையில் இருப்பவைதான். இருந்தாலும் சாப்பாடு அங்கு ஒரு பிரச்சினையாக இதுவரை இருந்ததில்லை. மேலும் 2 ஆண்டுகள் வரை கூட சாப்பாட்டை சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.
கத்திரிக்காய் கொத்சு வைக்கலாம்
இருப்பினும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சாப்பாட்டில் சுவை இருக்காது, வாசனை இருக்காது. காரணம், அங்கு புவி ஈர்ப்பு விசை இல்லை என்பதால். ஆனால் செவ்வாய் கிரகத்தில் அப்படி இல்லை, ஈர்ப்பு விசை இருப்பதால் உணவில் மணத்தையும், சுவையையும் உணர முடியும் இதனால்தான் செவ்வாய் கிரக விஞ்ஞானிகளுக்கென பிரத்யேக உணவு வகைகளை தயாரிக்க விஞ்ஞானிகள் குழு தீவிர ஆய்வில் இறங்கியுள்ளது.
காய்கறிகளைக் கொண்டு சென்று அங்கேய வெட்டி, சிறிய அளவில் சமைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதேபோல பிரஷர் குக்கரை பயன்படுத்தி சுடுதண்ணீர் வைக்கக் கூடிய வாய்ப்புகளும் உள்ளது என்கிறார்கள். பூமியிலும், செவ்வாயிலும் நிலவும் ஈர்ப்பு விசையில் வேறுபாடு உண்டு என்றாலும் கூட இவை சாத்தியம்தானாம்.
தோட்டம் போட்டு காய் வளர்க்கலாம்
இந்த இடத்தில் மாயா கூப்பர் மற்றும் அவரது குழுவினர் சில ஐடியாக்களை கைவசம் வைத்துள்ளனர். அதில் முக்கியமானது செவ்வாய் கிரகத்தில் குட்டியாக ஒரு தோட்டத்தையை போடுவது.
அதாவது பூமியில் மண்ணில் தோட்டம் போடுவோம். மாறாக செவ்வாய் கிரகத்தில் மினரல் வாட்டர் நிரம்பிய கலன்களில் தோட்டம் போடலாம். இதில் கேரட் முதல் பல்வேறு வகையான காய்கறிகளை வளர்க்க முடியும். இந்தத் தோட்டத்தை விண்வெளி வீரர்களே பார்த்துப் பராமரித்து வர வேண்டு்ம். காய்கறிகள் விளைந்த பின்னர் அதை எடுத்து சமைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றபடி மிளகு, சீரகம், உடைச்ச கடலை, உப்பு, சர்க்கரை போன்ற இத்தியாதி ஐட்டங்களை மட்டும் பூமியிலிருந்து கொண்டு சென்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்படிச் செய்வதன் மூலம் விண்வெளி வீரர்களுக்கு சுவையான, சத்தான, போஷாக்கான உணவு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தில் சாப்பாட்டு தொடர்பாக இதுவரை 100 வகை ரெசிப்பிக்களை கூப்பர் குழு தயாரித்துள்ளதாம். அனைத்துமே சைவ வகைகள்தான்.
அதேசமயம், இந்த உணவுகளில் புரதச் சத்து அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொண்டுள்ளனர்.
சமையலுக்கு தனி ஆள்
கூப்பர் குழு கொடுத்துள்ள இன்னொரு அட்டகாசமான ஐடியா, விண்வெளி வீரர் ஒருவரை முற்றிலும் சமையல் வேலைகளை மட்டுமே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். அவரது பணியே, காய்கறித் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டு, சமைத்து கொடுப்பதுதானாம்.
இது போக தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடைப்பிடிக்கப்பட்டும் உணவுப் பழக்க நடைமுறையையும் அவசரத்திற்கு கைவசம் வைத்துள்ளனராம்.
காசு தருவாரா ஒபாமா?
செவ்வாய் கிரகத்தில் தோட்டம் போட்டு, சமைத்து சாப்பிடுவது என்பது சொல்வதற்கும், கேட்பதற்கும் இனிமையாக இருக்கும். ஆனால் செலவுதான் தாளித்து எடுத்து விடுமாம். தற்போதே வருடத்திற்கு 10 லட்சம் டாலர் பணத்தை நாசா அமைப்பு, செவ்வாய் கிரக உணவு ஆராய்ச்சித் திட்டத்திற்காக செலவிட்டுக் கொண்டிருக்கிறதாம். ஆனால் இந்த செலவை சுருக்குமாறு பராக் ஒபாமா நிர்வாகம் ஏற்கனவே நாசாவுக்கு அறிவுறுத்தியுள்ளதாம். எனவே செவ்வாய் கிரகத்தில் தோட்டம் போட்டு காய் வளர்த்தி சமைக்கும் ஐடியாவுக்கு அமெரிக்க அரசு என்ன சொல்லும், காசு தருமா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை.
இருப்பினும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களால் இயல்பான வாழ்க்கை வாழ முடியுமா என்பதை அறிந்து கொள்ள இந்த பயணம் ஒரு பெரும் மைல்கல்லாக அமையும் என்பதால் அமெரிக்க அரசிடமிருந்து நிதியுதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாசா உள்ளது.