மானேசரிலுள்ள மாருதி ஆலையில் தொழிலாளர்களுக்கும், சூப்பர்வைசர்களுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் வன்முறையில் முடிந்தது. இதில், ஒருவர் பலியானார். அந்த ஆலையின் தலைமை அதிகாரி உள்பட் ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மானேசர் ஆலை அவ்வப்போது பிரச்னையில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு தொழிலாளி ஒருவரை சரியாக வேலை பார்க்கவில்லை என்று கூறி சூப்பர்வைசர் ஒருவர் நேற்று தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் சேர்ந்து கொண்டு அந்த சூப்பர்வைசரை அடித்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, அங்கு பெரும் வன்முறை மூண்டது. மேலும், சூப்பர்வைசர்களுக்கு ஆதரவாக வந்த அனைத்து சூப்பர்வைசர்கள் மீதும் தொழிலாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆலையின் அலுகலத்தையும் அடித்து நொறுக்கினர்.
இந்த பயங்கர வன்முறையில் அந்த ஆலையின் தலைமை அதிகாரி விக்ரம் களஞ்சி உள்பட 40 சூப்பர்வைசர்கள் காயமடைந்ததனர். இதில், இரண்டு ஜப்பானியர்களும் அடங்கும். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த ஒருவர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், மாருதியின் மானேசர் ஆலை போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. மேலும், அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, இருதரப்பையும் சேர்ந்த 85க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, குர்கானில் உள்ள ஆலையில் கார் உற்பத்தி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் மானேசர் ஆலையில் இன்று கார் உற்பத்தி நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மானேசரில் உள்ள மாருதி கார் ஆலை தொழிலாளர் பிரச்னையில் சிக்கி தவித்து வருகிறது.
கடந்த ஆண்டு தொழிலாளர்கள் நடத்திய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டாங்களால் கார் உற்பத்தி கணிசமாக பாதிக்கப்பட்டதால் அந்த நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்தது நினைவிருக்கலாம்.