குழந்தைகளைக் கொல்வதில் தமிழகத்திற்கு 3வது ரேங்க்... கள்ளக்காதல் கொலையே அதிகம்!

 Tamil Nadu Ranks 3rd Child Murders சென்னை: 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொலைச் சம்பவங்களில் தமிழகம் தேசிய அளவில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. தேசிய குற்றப் பதிவு ஆவணம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் குழந்தைகள் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அது கவலை தெரிவித்துள்ளது. தேசிய அளவில் அதிகளவில் குழந்தைகள் கொல்லப்படுவது மகாராஷ்டிராவில்தான். அங்கு 2011ம் ஆண்டு 141 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். 2வது இடம் உ.பிக்கு, அங்கு 96 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் பங்கு இதில் 90 ஆகும்.
குற்றச் செயல்களின் கூடாரமாகக் கருதப்படும் பீகார், டெல்லியில் நிலைமை பரவாயில்லையாம். பீகாரில் 28 சிறார்கள் மட்டுமே கொலையாகியுள்ளனர். டெல்லியில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கர்நடாகத்தில் 73 பேரும், கேரளாவில் 49 பேரும் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் கொலை செய்யப்படுவதற்கான சூழல்கள், காரணங்கள் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாகவே உள்ளது. பல சம்பவங்களில் கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் முக்கியக் காரணமாக இருந்துள்ளது. கள்ள உறவு தொடர்பாகவும் பல குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். மன வளம் குன்றியவர்களால் கொலை செய்யப்படும் குழந்தைகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
சமீபத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 19 வயதான மகாலட்சுமி என்ற பெண், தனது கள்ளக்காதலன் கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததால், கள்ளக்காதலரின் 4 வயது மகனைக் கொடூரமாகக் கொலை செய்தார் என்பது நினைவிருக்கலாம். இப்பெண் ஜூலை 1ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதே பல்லடத்தில் கடந்த மே மாதம் 27 வயதான சலூன் கடைக்காரர் ஒருவர், தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த 3 வயது சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தி பின்னர் படுகொலை செய்தார்.
2011ம் ஆண்டு புள்ளிவிவரப்படி தமிழகத்தில் கொலை செய்யப்பட்ட 18 வயதுக்குட்பட்டோர் எண்ணிக்கை 136 ஆகும். 2010ம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பாக மொத்தம் 810 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
2010ம் ஆண்டு சென்னை காவல்துறை, 4 கொலை வழக்குகளைப் பதிவு செய்தது. இவர்கள் பத்து வயதுக்குட்பட்டோர் ஆவர்.
சிறார்கள் கொலை செய்யப்படுவதும், குறிப்பாக கள்ளக்காதல், முறையற்ற காதல் உள்ளிட்ட காரணங்களுக்காக கொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருவது காவல்துறையை மட்டுமல்ல சமூக ஆர்வலர்களையும் பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: