எதிர்பார்த்தது போலவே ரெனோ டஸ்ட்டருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று வரை 5000 கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் மார்க் நசீப் தெரிவித்துள்ளார்.டஸ்ட்டர் காம்பெக்ட் எஸ்யூவியை நேற்றுமுன்தினம் ரினால்ட் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த எஸ்யூவிக்கு ஆரம்பம் முதலே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், விலை விஷயத்தில் ரினால்ட் சொதப்பாமல் இருந்தால் நிச்சயம் பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதைப்போலவே, ரூ.7.19 லட்சம் என்ற சவாலான விலையில் டஸ்ட்டரை களமிறக்கியது. ஏற்கனவே முன்பதிவு துவங்கப்பட்டிருந்தாலும், அறிமுகம் செய்யப்பட்டதற்கு பின் இரண்டு நாட்களுக்குள்ளேயே 3000க்கும் மேற்பட்ட டஸ்ட்டர் எஸ்யூவி புக்கிங் செய்யப்பட்டுள்ளது.
இதனால், ரினால்ட் நிறுவனம் உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறது. இதுவரை அந்த நிறுவனம் அறிமுகம் செய்த ப்ளூயன்ஸ், கோலியோஸ், பல்ஸ் ஆகிய கார்கள் எடுபடாத நிலையில், டஸ்ட்டருக்கு கிடைத்துள்ள வரவேற்பால் அந்த நிறுவனம் புதிய உற்சாகத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, சர்வீஸ் கட்டமைப்பை வலுவாக்கினால்தான் இந்த விற்பனையையாவது தக்கவைக்க முடியும் என்று கருதி டீலர் மற்றும் சர்வீஸ் மையங்களை வேகமாக திறந்து வருகிறது.
கடந்த மாதம் வரை 55 டீலர்களை அந்த நிறுவனம் திறந்திருக்கிறது. அடுத்த ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 100ஐ தாண்டிவிடும் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.