அசினா பர்வீன்... நெகிழ வைத்த பிஞ்சு!


''எனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து வெச்சிருந்தேன். ஆனா, கடலூர் மக்கள் புயல்ல பாதிக்கப் பட்டு இருக்காங்கன்னு அப்பா சொன்னதும் மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு. அதான் நான் சேர்த்துவெச்ச காசை அவங்களுக்குக் கொடுக்கலாம்னு வந்தேன்!'' என்று சொல்லி இரண்டு உண்டியல்களுடன் விகடன் அலுவலகத்துக்கு வந்து நின்றாள் அசினா பர்வீன்.
அதில் சைக்கிள் வாங்குவதற்காக அவள் சேர்த்துவைத்திருந்த ரூ.3,052 சில்லறைகளாகச் சிரித்தன. விகடனின் 'தானே’ துயர் துடைப்புப் பணிகளுக்கு அந்தத் தொகையைக் கொடுத்துச் சென்றாள் அச்சிறுமி. (இதுபற்றிய செய்தி 26.2.2012 தேதியிட்ட ஜூ.வி. இதழில் வெளியாகி இருந்தது!)

'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!
'சைக்கிள் வாங்க வைத்திருந்தேன்!''

நம்முடைய அலுவலகத்துக்கு இரண்டு உண்டியல்களுடன் வந்திருந்தார் அஸினா பர்வீன் என்ற சிறுமி. அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இவர் அந்த உண்டியல்களை நம்மிடம் கொடுத்து, 'கடலூர் பகுதி மக்களுக்காக என்னுடைய உதவி இது. எனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக சேர்த்து வெச்சிருந்தேன். ஆனா, கடலூர் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் உடனே அவங்களுக்குக் கொடுக்கத் தோணுச்சு'' என்று கொடுத்தார். எண்ணிப் பார்த்தால் மொத்தம் 3,052 ரூபாய் இருந்தது. அஸினாவின் கருணைக்கு விலை ஏது!

அந்தப் பிஞ்சு மனதின் தியாகம் ஏகமான வாசகர்களை நெகிழ வைத்து இருந்தது. இந்த நிலையில் தனது கனவைக் கலைத்து 'தானே’ நிவாரணத்துக்கு நிதி அளித்த அசினாவின் கனவை நிறைவேற்றி இருக்கிறது டி.ஐ.சைக்கிள்ஸ் ஆஃப் இண்டியா’ (பி.எஸ்.ஏ. ஹெர்குலிஸ்) நிறுவனம்!

அசினாவின் நன்கொடைச் செய்தியைப் படித்து விட்டு நம்மைத் தொடர்புகொண்ட அந்த நிறுவனத்தின் இணை விற்பனை மேலாளர் கனகராஜ், ''அசினா எங்கள் ஷோரூமுக்கு வந்து தனக்குப் பிடித்த மாடல் சைக்கிளைத் தேர்ந்தெடுக்கட்டும். அதை அவளுக்கு இலவசமா வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இது அசினாவின் பரந்த மனசுக்கு எங்களுடைய சின்ன பரிசு!'' என்றார்.

பாடி பி.எஸ்.ஏ. சைக்கிள் ஷோரூமில் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு இருந்த மிதிவண்டிகளை ரசித்துக்கொண்டே வந்தவள், பிங்க் நிற 'லேடி பேர்டு’ சைக்கிள் மீது கை வைத்து நின்றாள். கண்களில் ஆர்வமும் தயக்கமும் ஒருசேர மின்னின.

''இந்த சைக்கிள் பிடிச்சிருக்கா?'' என்று கேட்டதும் சின்னப் புன்னகையால் ஆமோதித்தாள். சைக்கிளில் ஏறி அமர்ந்ததும் சிட்டாகப் பறக்கத் தொடங்கி விட்டாள் அசினா. குறுகலான வீதிகளுக்குள் சர்..சர் என சைக்கிள் விட்டுக் கொண்டு இருந்த மகளைப் பூரிப்பாக பார்த்துக் கொண்டே பேசினார் அசினாவின் தாய் பாத்திமுத்து.

''முன்னாடியே இவ 750 ரூவா வரை உண்டியல்ல சேர்த்துவெச்சிருந்தா. குடும்பக் கஷ்டத்துல அந்த உண்டியலை உடைச்சுதான் சமாளிச்சோம். இவங்க அப்பா விகடன் வாசகர். விகடன் 'தானே’ துயர் துடைப்புப் பணிக்காக இவர் ஒவ்வொருத்தர் கிட்டயும் கையேந்துனார். அப்போ இவகிட்ட சும்மா விளையாட்டா கேட்டார். 'எதுக்கு’ன்னு விசாரிச்சா. விஷயத்தைச் சொன்னதும் உடனே இவ உண்டியலை எடுத்துக் கொடுத்துட்டா. இந்தச் சின்ன வயசுல இப்படி ஒரு நல்ல குணத்தை அல்லா இவளுக்குக் கொடுத்திருக்காரேன்னு சந்தோஷமா இருக்கு!''
thanks to satyamargam.com
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: