மறுபடியும் அதிமுகவுக்குத் திரும்புகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

Anitha Radhakrishna with Jayalalitha சென்னை: கடந்த தி்முக ஆட்சியின்போது, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு திமுகவில் போய்ச் சேர்ந்து, திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மறுபடியும் எம்.எல்.ஏவாக வலம் வந்தவரான அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் அதிமுகவில் சேரப் போவதாக திருச்செந்தூர் பகுதியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவின் அசைக்க முடியாத முக்கியத் தலைகளில் ஒருவராக இருந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன்.தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுகவின் முக்கியத் தூணாக விளங்கியவர். திமுகவுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தவர்.

2001 முதல் 2006 வரையிலான ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தார். தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராகவும் செயல்பட்டார். ஏகப்பட்ட தொழில்களிலும் ஈடுபட்டிருந்தார். கடந்த திமுக ஆட்சியின்போது லாவகமாக இவரை தன் பக்கம் வளைத்தது திமுக. இதனால் வெகுண்ட ஜெயலலிதா, அனிதாவை கட்சியை விட்டு தூக்கினார். அதே நாளில் காமெடியன் எஸ்.வி.சேகரையும் கட்சியை விட்டு கல்தா செய்தார் ஜெயலலிதா.

இதையடுத்து தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு திருச்செந்தூர் இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட சசிகலா குடும்பத்தினர்தான் காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது சசி குடும்பம் விரட்டப்பட்டு விட்டதால் மறுபடியும் அதிமுக நிழலில் ஒதுங்க அனிதா முடிவெடுத்திருப்பதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அனிதா கலந்து கொள்ளவில்லை. போனில் கூட பேசவில்லை என்கிறார்கள். அதேபோல சங்கரன்கோவில் தொகுதியில், நாடார் சமுதாயத்தினர் அதிகம் உள்ள கடையாசுருட்டி என்ற பகுதியில் தேர்தல் பொறுப்பாளராக அனிதாவை, அழகிரி நியமித்தார். அங்கும் பணிக்குப் போகவில்லையாம் அனிதா. போகவும் மறுத்து வருகிறாராம்.

அதிமுகவில் சேர அவர் ஓலை அனுப்பி விட்டதாகவும், அதற்கு ஜெயலலிதாவிடமிருந்து சம்மதம் வந்து விட்டதாகவும் கூறுகிறார்கள். இதனால்தான் திமுகவை முற்றிலும் புறக்கணித்து வருகிறார் அனிதா என்கிறார்கள். அதிமுக கரை வேட்டி வேஷ்டியை 'அயர்ன்' செய்து அனிதா தயாராகி விட்டார் என்றும் மார்ச் 13ம் தேதி சங்கரன்கோவிலுக்கு முதல்வர் ஜெயலலிதா வரும்போது அவரை சந்தித்து முறைப்படி தன்னை அதிமுகவில் இணைத்துக் கொள்ளப் போவதாகவும் தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் சங்கரன்கோவில் தேர்தல் களத்தில் அனிதாவும் தீவிரமாக களம் இறங்கி அதிமுகவின் வெற்றிக்குப் பாடுபடப் போவதாகவும் தெரிகிறது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: