பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்: 3,000 பள்ளிகளில் ஜெனரேட்டர் கிடையாது

 தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும், இன்று முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கும் நிலையில், "தேர்வு முடியும் வரை தொடர்ந்து மின்சாரம் வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
புக்கிங், "புல்': தமிழகத்தில், மின்வெட்டு பிரச்னையால், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக, பள்ளிகளில் ஜெனரேட்டர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் என, பல்வேறு தொழில் நிறுவனங்களால், ஜெனரேட்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதால், பள்ளிகளுக்கு கிடைக்கவில்லை.அரசுப் பள்ளிகளில் ஜெனரேட்டர்கள் வசதி, சுத்தமாகக் கிடையாது. பெரிய தனியார் பள்ளிகளில் மட்டும், ஓரளவுக்கு இந்த வசதிகள் இருந்தாலும், பள்ளி முழுவதிற்கும் மின்சாரம் வினியோகிக்கும் அளவுக்கு, சக்தி வாய்ந்த ஜெனரேட்டர்கள் இல்லை. நேற்று வரை, பல்வேறு இடங்களில் அலைந்தும், ஜெனரேட்டர்கள் கிடைக்கவில்லை என, பள்ளி நிர்வாகிகள் புலம்புகின்றனர்.
அதிக திறன் தேவை: இதுகுறித்து, சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள நடேசன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர், ராமசுப்பிரமணியன் கூறியதாவது:எங்களது பள்ளியில், 500 மாணவர்கள், பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர். ஒரு அறையில், 20 மாணவர்கள் தான் தேர்வு எழுத வேண்டும் என, அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படியெனில், மாணவர்கள், தேர்வு கண்காணிப்பாளர், துறை அதிகாரிகள், பள்ளி முதன்மை கண்காணிப்பாளர் என, 30 அறைகள் வரை தேவைப்படும்.இத்தனை அறைகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் என்றால், அதிக திறனுள்ள ஜெனரேட்டர் தேவை. பத்து நாட்களுக்கும் மேலாக, பல்வேறு இடங்களில் அலைந்தும், ஜெனரேட்டர் கிடைக்கவில்லை. இந்த
விவகாரத்தில், கல்வித் துறை அதிகாரிகளும் போதிய ஒத்துழைப்பு தரவில்லை.இவ்வாறு ராமசுப்பிரமணியன் தெரிவித்தார். "முதல்வர் தலையிடணும்': தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின், சென்னை மாவட்டத் தலைவர் ஆதியப்பன் கூறியதாவது:ஜெனரேட்டர் வாங்கிக் கொள்ளுங்கள் என, சாதாரணமாக கூறிவிட்டனர். ஆனால், நடைமுறையில் இந்த உத்தரவு நிறைவேறவில்லை. பள்ளி நிர்வாகிகள் முயற்சித்தும், ஜெனரேட்டர்கள் கிடைக்கவில்லை. ஏழு அல்லது எட்டு நாட்கள் வரை தான், தேர்வுகள் நடக்கப் போகின்றன. அது வரையாவது, காலை 10 மணியில் இருந்து, பிற்பகல் 1.15 வரை தொடர்ந்து மின்சாரம் வழங்க, முதல்வர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு ஆதியப்பன் கூறினார்.
மின் துறை ஒப்புதல்: மின் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், 5,000 பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்கள் தேவை என, பட்டியல் வந்துள்ளது. மின் வாரியத்திற்கு சொந்தமான, 500 ஜெனரேட்டர்களுடன், தனியாரிடம் வாடகைக்கு பெற்று, மொத்தம் 2,000 ஜெனரேட்டர்கள்
வழங்கப்பட்டுள்ளன.சில ஜெனரேட்டர்கள் பழுதாகியுள்ளன; அவற்றை சரி செய்யும் பணியில், மின் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ள 3,000 பள்ளிகளுக்கு, தேர்வு நடக்கும் மூன்று மணி நேரத்தில், மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்க முடிவாகியுள்ளது.இல்லையெனில், பள்ளிகள் இருக்கும் பகுதிகளுக்கு, தேர்வு நேரம் தவிர மாற்று நேரத்தில் மின்வெட்டை அமல்படுத்த, முடிவெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தலைகீழ் வெட்டு: இதனால், இன்று முதல், தேர்வு நடக்கும் நாட்களில், தமிழகம் முழுவதும், வழக்கமான நேரத்தில் இல்லாமல், மாற்று நேரத்தில் மின்வெட்டு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. காலை 10 மணி முதல், பகல் 1 மணி வரை, பள்ளிகள் இருக்கும் பகுதிகளின் மின்னூட்டிகளை தேர்ந்தெடுத்து, அந்தப் பகுதியில் மட்டும் மின்வெட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அந்த நேரத்தில், பள்ளிகள் இல்லாத இடங்களில், அறிவிக்கப்படாத  மின்வெட்டு அமலாகும். இதனால், இன்று முதல், மின்வெட்டு நேரத்தில் தலைகீழ் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது. நடைமுறை சாத்தியமில்லை:பள்ளிகள் இருக்கும் பகுதிகளுக்கு மட்டும், மின்வெட்டை மாற்ற முடியுமா என்பதில், நடைமுறை பிரச்னை உள்ளது. அனைத்து இடங்களிலும், பரவலாக பள்ளிகள் உள்ளன. அதனால், ஒரே நேரத்தில், பல இடங்களுக்கும் மின்வெட்டு விலக்கு தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பெரும்பாலான இடங்களில், வியர்வை சொட்டச் சொட்ட, மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய நிலை இருக்கும் என்றே தெரிகிறது.
தேர்வு நடப்பது 18 நாட்கள் தான்!: பிளஸ் 2 தேர்வுகள், இன்று துவங்கி, 30ம் தேதி முடிகிறது என்றாலும், மொத்தம் 11 நாட்கள் மட்டுமே தேர்வுகள் நடக்கின்றன.
இதேபோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் 4ம் தேதி துவங்கி, 23ம் தேதி வரை நடந்தாலும், தேர்வு நடப்பது ஏழு நாட்கள் மட்டும் தான்.இரு வகுப்புகளுக்கும் சேர்த்து, மொத்தம் 18 நாட்கள் தான் தேர்வுகள் நடக்கின்றன. எனவே, இந்த 18 நாட்களுக்கும், காலை 10 மணி முதல், பிற்பகல் 1.15 வரை தொடர்ந்து மின்சாரம் வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுத்தால், இக்கட்டான நேரத்திலும் மாணவர்களின் நலன்களைக் காத்த பெருமை, முதல்வரைச் சேரும்.
மாநகராட்சி பள்ளிகள் பற்றி கவலை இல்லை:
சென்னையில், 38 உயர்நிலைப் பள்ளிகளும், 32 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில், தேர்வு நடக்கும் நேரத்தில், தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளதால், இந்த பட்டியலில் மாநகராட்சி பள்ளிகள் வராது என, மின் துறையினர் தெரிவித்தனர். அதனால், மாநகராட்சி பள்ளி பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு, தடையில்லா மின்சாரம் கிடைக்குமா என்பது சந்தேகமே!
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: