
இஸ்லாமாபாத்,மார்ச். 8-
பாகிஸ்தானுக்கு, உலகவங்கி 150 மில்லியன் டாலர், கூடுதல் கடனுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக உலக வங்கியின் பாகிஸ்தானுக்கான இயக்குனர் ராய்செட் பென்மேசவுத் கூறினார்.
இந்த கடனுதவி அந்நாட்டின் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் அரசு, ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு திட்டத்தினை ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பெனாசீர் வருவாய் ஆதரவு திட்டம் என்ற பெயரில் சமூகத்தில் பின்தங்கிய ஏழை மக்களின் குழந்தைகளின் கல்விக்கும், வறுமை ஒழிப்பிற்கும் நிதி வழங்கிடும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதற்காக பாகிஸ்தான் உலகவங்கியிடம் கூடுதல் கடனுதவி கோரியிருந்தது. அதன்படி பாகிஸ்தானின் ஏழை எளிய குடும்பத்தினர் பயன்பெறும் வகையிலும், வஷீலா-இ-தலீம் எனப்படும் கல்வித்திட்டத்தி்ன் கீழ் 5 வயது முதல் 12 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்றுத்தரவும், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு நிதியுதவி வழங்கிடவும் 150 மில்லியன் டாலர் கூடுதல் கடனுதவி பயன்படும்.