
மும்பை:மும்பை இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில், மூன்று பேருக்கு "பொடா' கோர்ட் வழங்கிய மரண தண்டனை யை, மும்பை ஐகோர்ட் நேற்று உறுதி செய்தது.
கடந்த 2003ல், மும்பையில், கேட்வே ஆப் இந்தியா, ஜாவேரி பஜார் ஆகிய இடங்களில், சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில், 52 பேர் கொல்லப்பட்டனர்.இது தொடர்பான வழக்கு, பயங்கரவாத தடுப்புச் சட்ட சிறப்பு கோர்ட்டில் (பொடா கோர்ட்) நடந்தது.ஹனீப், அஷ்ரத் அன்சாரி, நசீர் ஆகிய மூவரும், துபாயில் இதற்கான சதித் திட்டத்தை தீட்டியதாக விசாரணையில் தெரியவந்தது. இவர்களில் நசீர் என்பவர், போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். மும்பையின் இரண்டு இடங்களிலும், சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை, இரண்டு டாக்சிகளில் வைத்ததாக, அஷ்ரத், ஹனீப் சயீது மற்றும் அவரதுமனைவி பெமிதா சயீது ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கில், மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கி, பொடா கோர்ட் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மூவரும், மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.இதை விசாரித்த மும்பை ஐகோர்ட், இந்த வழக்கு மீதான தீர்ப்பை, கடந்தாண்டு நவம்பரில் ஒத்தி வைத்தது. இந்நிலையில், நீதிபதிகள் கான்வில்கார், பி.டி.கோட் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது, குற்றச் சதிசெய்தது, கொலை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மூவருக்கும் வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இவர்கள் மூன்று பேரும், இந்த தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக, தண்டனையை எட்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, முகமது அன்சாரி லதுவாலா, முகமது ஹசன் பாட்டரிவாலா ஆகியோர் மீதான விசாரணை, இந்திய குற்றவியல் சட்ட நடைமுறைகளின்படி நடக்கும் என்றும், இதற்காக இவர்கள் நான்கு வாரங்களுக்குள் விசாரணை கோர்ட்டை அணுகும்படியும், நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.திருமணமான தம்பதியினருக்கு, பயங்கரவாத வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை.