பெங்களூர்: கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கருக்கு இதுதான் கடைசி ஐபிஎல்லாக இருக்கும் என்று பேச்சு அடிபடுகிறது. இவர் பிறந்ததே சாதனை படைக்கத்தானோ என்று நினைக்கும் அளவுக்கு சச்சின் சட்டை முழுவதும் சாதனைப் பொத்தான்களின் எண்ணிக்கை நிரம்பி வழிகிறது. இந்த சாதனை அந்த சாதனை என்று எதையும் பாக்கி வைக்கவில்லை இந்த மும்பை புயல். அந்தஅளவுக்கு சாதனை படைத்து விட்டார் சச்சின். தற்போது ஒவ்வொரு போட்டியாக அவர் ஓய்வு பெற ஆரம்பித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவர் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த ஆண்டு ரஞ்சிப் போட்டியில் அவர் ஆடினார். இதுவே அவரது கடைசி ரஞ்சியாக இருக்கலாம் என்று ஏற்கனவே பேச்சு அடிபடுகிறது. இந்த நிலையில் 6வது ஐபிஎல்லோடு முடித்துக் கொள்ள சச்சின் தற்போது திட்டமிட்டுள்ளதாக ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.
2014ல் வாய்ப்பில்லை மும்பை இந்தியன்ஸ் அணியின் அசைக்க முடியாத வீரராக இருக்கிறார் சச்சின். தொடர்ந்த மும்பை அணியின் ஐகான் வீரராகவும் விளங்கி வருகிறார்.
மீண்டும் கேப்டனான மர்மம் கடந்த தொடரில் அவர் கேப்டனாக இருக்கவில்லை. மாறாக ஹர்பஜன் சிங்கிடம் பொறுப்பைக் கொடுத்திருந்தார். ஆனால் தற்போது மீண்டும் கேப்டனாக்கப்பட்டுள்ளார். இதனால் அடுத்த ஆண்டு போட்டியில் அவர் விளையாட மாட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
40 வயது பிறக்கிறது சச்சினுக்கு ஏப்ரல் 24ம் தேதி 40 வயது பிறக்கிறது. எனவே இதற்கு மேலும் அவர் விளையாட மாட்டார் என்பதே அனைவரின் எண்ணமாகவும் இருக்கிறது. தனது பிறந்த நாளின்போது சச்சின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் ஆடவுள்ளார்.
அடுத்த வருடம் விளையாடுவது கஷ்டம் எனவே அடுத்த வருடம் 41 வயது பிறக்கும் நிலையில் சச்சின் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து ஆட வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.
டெஸ்ட் போட்டிகளுக்கும் குட்பை சொல்லலாம் அதேபோல இந்த ஆண்டே டெஸ்ட் போட்டிகளுக்கும் சச்சின் குட்பை சொல்லலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
மும்பைக்கு பட்டம் வாங்கித் தருவாரா? சச்சின் கேப்டனாக இருந்து எதையும் சாதித்ததில்லை என்பது வரலாறு. இந்திய கேப்டனாக இருந்தபோதும் அவர் சாதிக்கவில்லை. மும்பை கேப்டனாக இருந்தபோதும் சாதிக்கவில்லை. எனவே இந்த ஐபிஎல் தொடரில் மும்பைக்கு அவர் சாம்பியன் பட்டம் வாங்கித் தருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.