கோட்டயம்: ராஜிவ் கொலை வழக்கில் மூன்று தமிழரையும் தூக்கிலிடக் கூடாது என்று தூக்கு தண்டனை விதித்த நீதிபதியான கே.டி.தாமஸ் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்கு தலைமை வகித்தவர் கே.டி. தாமஸ். இருப்பினும் நளினி பெண் என்பதால் தூக்கு கூடாது என்றும் கருத்து தெரிவித்திருந்தார் தாமஸ்.
பின்னர் நளினிக்கு ராஜிவின் மனைவி சோனியா கருணை காட்டியதால் ஆயுள் தண்டனையானது. மற்ற மூன்று தமிழரும் தூக்கு மேடையில் நிற்கின்றனர். இந்த நிலையில் தூக்கு விதித்து தீர்ப்பளித்த நீதிபதி கே.டி. தாமஸ் கேரள மாநிலம் கோட்டயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், ராஜிவ் வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட மூவருமே 22 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டனர். அவர்கள் ஆயுள் தண்டனைக் காலத்தைவிட கூடுதலான காலத்தை சிறையில் கழித்திருக்கின்றனர். இதனால் ஒரே குற்றத்துக்காக ஆயுள் தண்டனை, தூக்கு தண்டனை என இருவித தண்டனை விதிக்க முடியாது. அவர்கள் தங்களை தூக்கிலிடக் கூடாது என்று கோருவதற்கு அரசியல் சாசனத்தில் இடமிருக்கிறது. இதனால் மூவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஏற்கெனவே உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான வி.ஆர். கிருஷ்ணய்யர், தூக்கு தண்டனையை இந்தியாவில் இருந்து அறவே ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அவர் மூன்று தமிழரையும் தூக்கிலிடக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் மற்றொரு ஓய்வு பெற்ற நீதிபதியான கே.டி. தாமஸும் அதுவும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதியே தூக்கு கூடாது என்று கூறியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.