மும்பை:மாதம், ஆயிரம் ரூபாய் கட்டணத்திற்குள் மட்டுமே மொபைல் போனை பயன்படுத்தும் நபருக்கு, "13 கோடி ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்' என, எம்.டி.என்.எல்., நிறுவனத்தில்இருந்து, "பில்' வந்ததால், அவர் அதிர்ச்சி அடைந்தார்.
மும்பை மாநகரின், காண் டிவ்லி பகுதியை சேர்ந்தவர், விஸ்வநாத் ஷெட்டி. டில்லி, மும்பை, கோல்கட்டா ஆகிய பெருநகரங்களில் மட்டும், தொலை தொடர்பு சேவை வழங்கும், எம்.டி.என்.எல்., நிறுவனத்தின், "டால்பின்' மொபைல் போன் சேவை பெற்றுள்ளார்.சேவைகளை பயன்படுத்திய பிறகு, கட்டணம் செலுத்தும், போஸ்ட் பெய்டு திட்டத்தில், மொபைல் இணைப்பு பெற்று இருந்த ஷெட்டி, மாதம், அதிகபட்சம், 1,500 ரூபாய் கட்டணத்திற்கு அதிகமாக மொபைல் போனை பயன்படுத்தியதில்லை.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை கொண்ட அவர், "தாளில் பில் வேண்டாம்; மொபைல் போனில், பில் தொகையை அனுப்பி வைத்தால் போதும்' என அறிவுறுத்தியுள்ளதால், மொபைல் போனில் தான், பில் தொகை அனுப்பப்படுவது வழக்கம்.அந்த வகையில், மூன்று நாட்களுக்கு முன், அவருக்கு பில் வந்தது. அதில், "ஜனவரி மாதத்தில் நீங்கள் மொபைல் போனை பயன்படுத்திய வகையில், 13.20 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்; கட்டணத்தை ஏற்கனவே செலுத்தியிருந்தால், இந்த செய்தியை மறந்து விடுங்கள்; இல்லையேல், உடனடியாக கட்டணம் செலுத்துங்கள்' என, அறிவிப்பு வந்தது.
அதை பார்த்ததும், ஷெட்டிக்கு, ஒரு நிமிடம், இதயமே நின்று விட்டது. "13 லட்சத்தை கூட மொத்தமாக பார்த்ததில்லையே; 13 கோடிக்கு, மொபைல் போன் கட்டணமா...' என, அதிர்ந்தார். மனதை தேற்றி, காண்டிவ்லி, எம்.டி.என்.எல்., அலுவகம் சென்று, தனக்கு வந்துள்ள, அதிர்ச்சி தொகை குறித்து புகார் கூறினார்.
"நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது; பாந்த்ரா - குர்லா வளாகத்தில் உள்ள தலைமையகத்திலிருந்து, இச்செய்தி வந்துள்ளது' என, கூறினர்.
இதனால், மேலும் பரபரப்பான ஷெட்டி, தன் நண்பர்களுடன் கலந்தாலோசித்து கொண்டிருந்த போது, அவருக்கு மற்றொரு, மெசேஜ், எம்.டி.என்.எல்., நிறுவனத்திடம் இருந்து வந்தது."உங்களுக்கு வந்த முந்தைய மெசேஜை மறந்து விடுங்கள்; நீங்கள், 1,318 ரூபாய் தான் செலுத்த வேண்டும்; தவறுக்கு மன்னிக்கவும்' என, அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை பார்த்த ஷெட்டி, நிம்மதி அடைந்தார்.எம்.டி.என்.எல்., அலுவலகத்தில் விசாரித்த போது, "கம்ப்யூட்டர் தவறால், 1,318 தொகைக்கு பின், சில எண்கள் சேர்ந்து விட்டன' என தெரிய வந்தது.