டெல்லி: முன்னாள் விமான பணிப் பெண் கீத்திகா சர்மாவின் தாயும் நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா முன்னாள் அமைச்சர் கோபால் கண்டா நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் விமானப் பணிப் பெண் கீத்திகா சர்மா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
அமைச்சர் கோபால் கண்டா மற்றும் அவரது உதவியாளர் கொடுத்த தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக 22 வயதான கீத்திகா சர்மா ஒரு கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கீத்திகா சர்மாவை, கோபால் கண்டா பிளாக் மெயில் செய்ததாக, கீத்திகாவின் பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரத்தில் முதலில் தலைமறைவாக இருந்து பின்னர் போலீஸில் சரணடைந்த கோபால் கண்டா தற்போது சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் கீத்திகா சர்மாவின் தாய் அனுராதா மேற்கு டில்லியில் உள்ள தனது வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். கீத்திகா தற்கொலை செய்து 7 மாதம் கழித்து அதே வீட்டில், அதே அறையில், அதே மாதிரி, அவரது தாய் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்!
மகளைப் போலவே தமது தற்கொலைக்கு காரணம் கோபால் காண்டாதான் என்று எழுதி வைத்துவிட்டே அனுராதா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.