அமெரிக்கத் தமிழர்களின் திருக்குறள் போட்டி - 5000 டாலர் பரிசு!

 5000 Thirukkural Contest At Dallas டல்லாஸ்: அமெரிக்காவில் பிரபலமான 'ஒரு குறள் ஒரு டாலர் பரிசு' திருக்குறள் போட்டி இன்று டல்லாஸில் நடைபெறுகிறது. 

சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் நடைபெறும் இந்த போட்டியில் சுமார் 250 குழந்தைகளும் பெரியவர்களும் கலந்து கொள்கிறார்கள். பங்கேற்பவர்கள் கொடுத்துள்ள பட்டியலின்படி ஐயாயிரத்திற்கு மேற்பட்ட தடவைகளில், திருக்குறள்கள் ஒப்புவிக்கப்பட இருக்கிறது. கூடவே விளக்கமும் தெளிவாக சொல்பவர்களுக்கு ஒரு டாலர் வீதம் ஒரு குறளுக்கு கொடுக்கப்படுகிறது. 

டல்லாஸ் வாழ் தமிழ்க் குழந்தைகள் போட்டி போட்டுக்கொண்டு அதிக அளவில் குறள்கள் ஒப்புவிக்க பதிவு செய்துள்ளனர். இரண்டு வயது முதல் ஐந்து வயது வரை உள்ள மழலைகளும் போட்டியில் கலந்து கொள்வது வியக்கத்தக்கதாகும். அவர்களில் சிலர் ஐம்பது குறள்கள் வரை பதிவு செய்துள்ளது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. 

ஒரு டாலர் பரிசு ஏன்? 

சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் தலைவர் வேலு அவர்களிடம், எந்த நோக்கத்திற்காக ஒரு டாலர் பரிசு அறிமுகப்படுத்தினீர்கள் என்று கேட்ட போது ‘ குழந்தைகளை எப்படி ஊக்கப்படுத்தலாம் என்று யோசித்த போது போது நேரடியாக பணமாக கொடுத்தால், அது அவர்களுக்கு கிடைத்த ஊதியமாக பெருமைப்படுவதாக உணர்ந்தோம். 

இன்னும் ஒரு குறள் சொன்னால் இன்னும் ஒரு டாலர் கிடைக்குமே என்ற உந்துதலை கொடுப்பதையும் அறிந்து கொண்டோம். ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் முந்தைய ஆண்டைவிட இரட்டிப்பாக திருக்குறள்கள் சொல்கிறார்கள். அதோடு அந்த குறள்களை மேற்கோள் காட்டி அன்றாட வாழ்க்கையில் பேசுவதையும் அறிந்து மிக்க மகிழ்ச்சியடைகிறோம். குழந்தைகளை முழு அர்த்தத்துடன் திருக்குறளை புரிந்து அதன் படி நடக்கச்செய்வதுதான் எங்கள் நோக்கம். அது நிறைவேறி வருவதை கண்கூடாக பார்க்கிறோம். தமிழுக்காக அள்ளிக்கொடுக்கும் அமெரிக்கத் தமிழர்களின் நன்கொடையால் ‘ஒரு குறள் ஒரு டாலர்' திட்டம் வெற்றிகரமாக நடைபெறுகிறது" என்றார் 

காலை 9 மணி முதல் 12 மணி வரை, இர்விங், டி.எஃப்.டபுள்யூ இந்து கோவில் வித்யா விகாஸ் தமிழ்ப் பள்ளி அரங்குகளில் திருக்குறள் போட்டி நடைபெறுகிறது. 

மாலை 5.30 மணிக்கு கார்லெண்ட் க்ரான்வில் ஆர்ட்ஸ் சென்டரில், பரிசளிப்பு விழா, திருக்குறள் விழாவாக நடைபெறுகிறது. தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நாடகங்களும், 'தமிழ் இனி' குறும்படமும் விழாவில் இடம் பெறுகிறது. 

சிறப்பு விருந்தினராக, தமிழ் ஆர்வலரும், ஆரக்கிள் கார்போரேஷனில் உயர்ந்த பதவியில் இருப்பவரும், 'தமிழ் இனி' படத்தின் இயக்குனருமான மணி ராம் கலந்து கொள்கிறார். நாளைய இயக்குநர்கள் நிகழ்ச்சியில் முதல்பரிசு வென்ற 'தமிழ் இனி' மற்றும் 'ரகசிய சிநேகிதியே' படங்களின் இயக்குநர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஆண்டு டல்லாஸ் மாநகர அளவில் நடைபெற்ற போட்டி, இந்த ஆண்டு டெக்சாஸ் மாநில அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: