கோபிசெட்டிபாளையம், பிப்.2-
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள தொட்டக்காஜனூரை சேர்ந்த சந்தியா (வயது 15), குஷ்மா (15) ஆகிய 2 பேரும் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர். கடந்த மாதம் 7-ந் தேதி பள்ளிக்கூட மைதானத்தில் மாணவிகள் சந்தியா, குஷ்மா ஆகியோர் மீது ஜீப் மோதியதில் சந்தியா பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த குஷ்மா மைசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தை கண்டித்து ஒரு கும்பல் தாளவாடி அரசு ஆஸ்பத்திரியை சூறையாடியும், அரசு பஸ்களின் கண்ணாடிகளை உடைத்தும் வன்முறையில் ஈடுபட்டது. இதுதொடர்பாக 58 பேரை போலீசார் கைது செய்து, கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள கன்னட மொழி பேசுபவர்களை விடுவிக்க வலியுறுத்தி கன்னட சலுவாலியா வாட்டாள் பக்ஷா கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தனது ஆதரவாளர்களுடன் தமிழக எல்லையான தாளவாடியில் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து தாளவாடிக்குள் நுழைய வாட்டாள் நாகராஜிக்கு கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. பழனிச்சாமி தடை உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து தாளவாடியில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்காக வாட்டாள் நாகராஜ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தாளவாடி பகுதிக்குள் நுழைய 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இந்தது.
இந்த நிலையில் இன்று தாளவாடியில் தமிழக எல்லையான பார்வதிபுரம் அருகே தனது ஆதரவாளர்களுடன் வாட்டாள் நாகராஜ் தமிழக எல்லைக்குள் நுழைய தயாராக இருந்தார் அவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.