ஒரத்தநாடு, பிப்.1-
தஞ்சை மாவட்டம் பாப்பநாடு அருகே ஆம்பலாப்பட்டு வடக்கு சேனாதிபதி தெருவைச் சேர்ந்தவர் நீலவர்ணம். இவரது மகன் ராஜா (27). இவர் மீது கடந்த 2009 ஆம் ஆண்டு தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின் (பி.சி.ஆர்.) கீழ் பாப்பநாடு போலீசார் வழக்குப் பதிவுச் செய்து ராஜாவை தேடி வந்தனர்.
மேலும் தஞ்சை மாவட்ட குடியுரிமை நீதிமன்றம் மற்றும் முதலாவது கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனால் தீண்டாமை வன்கொடுமை தடுப்புப் பிரிவு போலீசாரும் ராஜாவை தேடி வந்தனர். ஆனால் ராஜா பிடிப்படவில்லை. இதணையடுத்து போலீசார் ராஜாவின் உறவினர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சிங்கப்பூர் தப்பிச்சென்று விட்டது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து அப்போதைய தஞ்சை மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் இவ்வழக்கில் இருந்து தப்பிச்சென்ற ராஜா குறித்த அனைத்து தகவல்களையும் திருச்சி மற்றும் சென்னை விமானத்துறை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்தில் ராஜா வந்து இறங்கினார். அப்போது விமானத்துறை போலீசாரும், இம்மிகிரேசன் அதிகாரிகளும் ராஜாவின் பாஸ்போட், புகைப்படம், சுய முகவரி ஆகியவற்றை சோதனையிட்டனர். அப்போது ராஜா மீது ஏற்கனவே பி.சி.ஆர். வழக்கு இருப்பதாகவும், அந்த வழக்கில் சிக்காமல் இருக்க சிங்கப்பூர் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
உடனே விமானத்துறை போலீசார் இது குறித்த தகவல்களை தஞ்சை மாவட்ட எஸ்.பி.யின் தலைமை அலுவலகத்திற்கு தெரிவித்தனர். இதையடுத்து பாப்பாநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் திருச்சி விமான நிலையத்திற்கு சென்று ராஜாவை கைது செய்து தஞ்சை கோர்டில் ஆஜர்படுத்தினர்.