சென்னை, பிப். 2-
கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்த பாபு. அங்குள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ. 53 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு புரசைவாக்கத்தில் உள்ள அதே வங்கிக்கு காரில் சென்றார். அப்போது கார் கண்ணாடியை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொளத்தூரைச் சேர்ந்த கிஷோர்குமார், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பிரதீப் ஆகியோரை கைது செய்தனர். ராஜமங்கலத்தைச் சேர்ந்த குமார் என்ற வாலிபர் சரண் அடைந்தார். இவர்களிடமிருந்து ரூ. 44 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 கொள்ளை வழக்குகளில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அயனாவரம் பகுதியில் வசந்தா கார்டன், ராமானுஜம் நகர் பகுதியில் வீடு புகுந்து திருடிய அப்துல் காதர் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 9 பவுன் தங்க நகை மீட்கப்பட்டது. ஐ.சி.எப். பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சகோதரர்களான செல்வராஜ், ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டு 15 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டது.
போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கைப்பற்றப்பட்ட பொருட்களை இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் செயின் பறிப்பு, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்கள் குறைந்துள்ளன. கடந்த 4 மாதங்களில் இதுபோன்ற சம்பவங்கள் போலீஸ் ரோந்து பணி காரணமாக வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.