டெஹ்ரான்: ஈரானின் முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையை தான் அடைய விரும்புவதாக ஈரான் அதிபர் மஹமூத் அகமதினேஜத் கூறியுள்ளார்.
விண்வெளிக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் ஈரானின் முயற்சிக்கு முதல் வீரராக தான் விண்ணுக்குச் செல்லத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக தனது உயிரைக் கூட தியாகம் செய்யத் தான் தயாராக இருப்பதாகவும் அகமதினேஜத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஈரான் விஞ்ஞானிகளுக்கு நான் சொல்லிக் கொள்வது, நான் விண்வெளி வீரராக, முதல் ஈரான் விண்வெளி வீரராக நான் விண்ணுக்குச் செல்லத் தயார். உயிரினங்களை விண்வெளிக்கு அனுப்பும் ஈரானின் திட்டங்களுக்கு நான் தியாகக் கல்லாக விளங்கவும் தயாராக இருக்கிறேன்.
உயிரினங்களை விண்வெளிக்கும் அனுப்பும் ஈரானின் திட்டங்கள் படிப்படியாக பயன் தரஆரம்பித்துள்ளது. இது ஆயிரக்கணக்கான ஈரான் விஞ்ஞானிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றார் அகமதினேஜத்.
கடந்த திங்கள்கிழமைதான் ஒரு குரங்கை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பி வைத்தது ஈரான் என்பது நினைவிருக்கலாம். இதனால் அடுத்த ஐந்து அல்லது 6 ஆண்டுகளில் மனிதனை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பி வைப்போம் என்றும் ஈரான் அதிபர் வெற்றிப் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட 72 மைல் தூரத்திற்கு விண்வெளியில் பயணம் செய்த பிஷாம் என்ற இந்த குரங்கு பின்னர் பத்திரமாக பூமிக்கு திரும்பி வந்து சாதனை படைத்தது என்பது நினைவிருக்கலாம். ஆனால் ஈரான் இதில் மோசடி செய்துள்ளதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. காரண், அனுப்பிய குரங்காக காட்டப்பட்ட புகைப்படத்திற்கும், திரும்பி வந்த குரங்கு என்று வெளியான புகைப்படத்திற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருந்ததே.