அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது தாயையும் மகனையும் தீவைத்து கொளுத்தி கொடூரமாக படுகொலைச் செய்த குற்றவாளிகள் இந்துத்துவ தீவிரவாதிகள் 6 பேரை நீதிமன்றம் ஆதாரம் இல்லாததால் விடுதலைச் செய்துள்ளது.
ஏப்ரல் 21-ஆம் தேதி கோமதிபூரில் இந்த கொடூர படுகொலை சம்பவம் நிகழ்ந்தது.
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஃபெரோஸ், ஹமீதா பானு ஆகியோரை வெறிப்பிடித்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கும்பல் தடுத்து நிறுத்தி பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொளுத்தி கொடூரமாக கொலைச் செய்தது. இச்சம்பவம் நடக்கும்போது அப்பகுதியில் உள்ள கடைகளில் ஹிந்துத்துவா பயங்கரவாத கும்பல் கொள்ளையடித்தது. சம்பவம் நிகழ்ந்த உடன் முதல் தகவல் அறிக்கை பதிவுச் செய்யப்பட்டது.
ஆனால், குற்றவாளிகள் 2006-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவன் மரணித்துவிட்டான். 2011 ஆம் ஆண்டில் விசாரணை துவங்கியது. நேரடி சாட்சிகள் இல்லாத வழக்கில் போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர் உள்பட எட்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
வழக்கின் விசாரணை சரியான திசையில் செல்லவில்லை என்றும், சம்பவம் நிகழ்ந்து நான்கு வருடங்களுக்கு பிறகே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள் என்று அரசு தரப்பு வழக்குரைஞர் யு.டி.ஷெகாவத் கூறினார். குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றத்தை நிரூபிக்க அரசு தரப்பால் இயலவில்லை என்று கூடுதல் அமர்வு நீதிபதி எம்.பி.சேத் தனது தீர்ப்பில் கூறினார்.