மாயாவதி எதிர்ப்பை முழுமையாக பயன்படுத்த முடியாமல் சுருண்டு போன காங்., பாஜக

  லக்னோ: உ.பியில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைத்த பெரும் பின்னடைவை தங்களுக்கு சாதகமாக முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாமல் படு தோல்வியைச் சந்தித்துள்ளன காங்கிரஸும், பாஜகவும்.

உ.பி. சட்டசபைத் தேர்தலில் அனைவரும் எதிர்பார்த்தது போல சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியைக் கொண்டு வந்துள்ளது. அந்தக் கட்சி தொடர்ந்து அசைக்க முடியாத முன்னிலையில் இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 200 இடங்களை அது பெறக் கூடிய நிலை உள்ளது.

ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி ஆரம்பத்தில் 3வது இடத்தில் இருந்தது. இதனால் மோசமான தோல்வியை அக்கட்சி தழுவும் நிலை இருந்தது. இருப்பினும் தற்போது அந்தக் கட்சி 2வது இடத்திற்கு வந்து விட்டது. மேலும் 100 இடங்களையும் அது தாண்டி விட்டது. இது யாரும் எதிர்பாராதது.

தற்போதைய முன்னிலை நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது மாயாவதிக்கு எதிரான எதிர்ப்பலையை முலாயம் சிங் கட்சி முழுமையாக பயன்படுத்தவில்லை என்பது தெரிய வருகிறது. அதேபோல முலாயம் சிங் மற்றும் மாயாவதி கட்சிகளிடம், காங்கிரஸும், பாஜகவும் படு தோல்வியைச் சந்தித்துள்ளன என்பதும் புரிகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியன் வெற்றியை காங்கிரஸும், பாஜகவும்தான் அதிகம் பதம் பார்த்துள்ளன. ஆனாலும் அதைக் கூட அவர்களால் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போயுள்ளது. இது ராகுல் காந்திக்கு கிடைத்த மிகப் பெரிய அடி என்றும் கூறலாம்.

கடந்த 2007 தேர்தலில் இங்கு காங்கிரஸ் கூட்டணிக்கு 32 இடங்களில் வெற்றி கிடைத்தது. தற்போது அதை விடக் கூடுதலாக 50 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதுதான் ஒரே ஒரு சாதகமான அம்சமாகும்.

அதேபோல கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு 51 இடங்கள் கிடைத்தது. தற்போது அக்கட்சி 41 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் 4வது இடத்திற்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி கடந்த தேர்தலில் 206 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் இதுவரை 100 இடங்களில் மட்டுமே அது முன்னிலை பெற்றுள்ளது. இருப்பினும் கடந்த முறை 2வது இடத்தைப் பிடித்த சமாஜ்வாடியை விட பகுஜன் சமாஜ் கட்சி பரவாயில்லை என்று கூறலாம்.

சமாஜ்வாடிக் கட்சிக்கு கடந்த தேர்தலில் 97 இடங்கள் மட்டுமே கிடைத்தது என்பது நினைவிருக்கலாம்.

எனவே இந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிரான எதிர்ப்பலையை சமாஜ்வாடிக் கட்சி ஓரளவு பயன்படுத்திக் கொண்டுள்ளது என்றாலும், காங்கிரஸும், பாஜகவும் அதை சரிவர பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டன.
  
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: