திண்டுக்கல், மே.9-
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சிறுகுடி கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டி (27). இவரும் அதே பகுதியை சேர்ந்த தனலெட்சுமி (25) என்பவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வருகின்றனர். இவர்கள் காதலுக்கு இருதரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் காதல் ஜோடிகள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
அவ்வப்போது பழனி யாண்டி தனலெட்சுமியிடம் உன்னைதான் திருமணம் செய்வேன் எனக்கூறி பழகி வந்துள்ளார். இதனால் தனலெட்சமி தனது காதலனிடம் அடிக்கடி என்னை எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என கேட்டுவந்துள்ளார்.
சம்பவத்தன்று தனலெட்சுமியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட பழனியாண்டி இன்று நீ வீட்டை விட்டு வெளியேறி மணக்கோலத்தில் வா நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என கூறினார். காதலன் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியதை கேட்ட தனலெட்சுமி மிகவும் மகிழ்ச்சியுடன் பட்டுப்புடவை கட்டிக் கொண்டு மணக்கோலத்தில் காதலன் கூறிய இடத்திற்கு சென்றார்.
இருவரும் அங்கு நீண்டநேரம் மனம்விட்டு பேசினர். அப்போது பழனியாண்டி காதலியிடம் உன்னை தவிர வேறுயாரையும் என்னால் கனவில் கூட நினைத்து பார்க்கமுடியாது. உன்னைதான் திருமணம் செய்து கொள்வேன் என திருமண ஆசை வார்த்தைக் கூறி அவரிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
காதலனிடம் கற்பை இழந்த தனலெட்சுமி காதலனுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என முடிவெடுத்து வடமதுரை போலீசில் புகார் செய்தார். புகாரில் திருமண ஆசைகாட்டி முருகன் மகன் பழனியாண்டி என்பவர் என்னை கற்பழித்து விட்டார் என்று கூறியிருந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள பழனியாண்டியை தேடி வருகின்றனர்.