லண்டன்: மகாத்மா காந்தியின் ரத்த மாதிரி, அவரது செருப்பு, சால்வை உள்ளிட்டவை இன்று லண்டனில் ஏலத்திற்கு விடப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற ஏல நிறுவனமான முல்லக்ஸ் மகாத்மா காந்தி எழுதி வைத்த உயிலின் நகல், பழைய செருப்பு, அவர் அணிந்திருந்த சால்வை, பதிவு செய்யப்பட்ட உரைகள், மைக்ரோஸ்கோப் ஸ்லைடில் உள்ள அவரது ஒரு சொட்டு ரத்தம் ஆகியவற்றை லண்டனில் இன்று ஏலத்திற்கு விடுகிறது. லண்டனில் உள்ள லட்லோ ரேஸ்கோர்ஸில் உள்ள முல்லக்ஸ் மகாத்மா காந்தியின் பொருட்களை ஏலத்தில் விடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
காந்தியின் பொருட்களை அவரின் ஆதரவாளர்களான ஓய்வு பெற்ற ஆசிரியரான அந்தோணி சிட்டட்டுகாரா உள்ளிட்டோர் தான் ஏலத்தில் விட கொடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. சிட்டட்டுகாரா இந்த பொருட்களை சுமார் 20 ஆண்டுகளாக வங்கி லாக்கரில் பத்திரமாக வைத்திருந்திருக்கிறார். காந்தியின் ரத்தம் படிந்த மண்ணை சுபேதார் பி.பி. நம்பியார் என்பவர் எடுத்து அதை பத்திரமாக பல காலம் வைத்திருந்திருந்தார் என்று சிட்டட்டுகாரா தெரிவித்துள்ளார். காந்தி சுட்டுக் கொல்லப்படும் முன்பு பிர்லா ஹவுஸுக்கு வெளியே நின்ற பாதுகாவலர்களில் ஒருவர் தான் இந்த நம்பியார்.
காந்தியின் ரத்தம் படிந்த மண்ணை பாதுகாக்க விரும்புபவருக்கு அதை தர தயாராக இருப்பதாக நம்பியார் கேரளாவில் உள்ள செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்தார். இதைப் பார்த்த சிட்டட்டுகாரா அவரிடம் இருந்த ரத்தக் கரை படிந்த மண்ணை வாங்கிக் கொண்டார்.