ஒஹியோ: அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் 10 ஆண்டுகளுக்குப் பின்பு ஒரே வீட்டில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மூவரும் வெவ்வேறு தருணங்களில் தனித்தனியே காணாமல் போனவர்கள் இப்போது ஒரே நேரத்தில் போலீசாரால் மீட்கப்பட்டனர்.
உயிரோடு மீட்கப்பட்டுள்ள பெண்களில் அமாண்டா பெர்ரி என்பவர் 2003ஆம் ஆண்டு தன்னுடைய 16 வது வயதில் காணாமல் போனார்.
2004ல் காணாமல்போன ஜீனா டிஜீஸெஸுக்கு அப்போது 14 வயதுதான் ஆகியிருந்தது. இவர்களுக்கெல்லாம் முன்பாக 2002ல் காணாமல்போன மிஷெல் நைட்டுக்கு தொலைந்த போது அவரது வயது 19.
போலீசிடம் உதவி கோரிய அமாண்டா கிளீவ்லாந்தின் தெற்கு பகுதியில் இருந்த ஒரு வீட்டில் பல வருடங்களாக அடைபட்டுக் கிடந்த இந்த 3 பெண்களில் அமாண்டா பெர்ரி, விடுதலைக்காக பரபரபரப்பான முயற்சி ஒன்றில் இறங்கினார்.
தங்களை அடைத்துவைத்திருந்தவர் வீட்டை விட்டு வெளியே சென்ற நேரத்தில் அமாண்டா பெர்ரி உதவி கோரி கூச்சலிட்டிருந்தார்.
இந்தச் சத்தம் அருகில் வாழ்ந்தவர் சார்ல்ஸ் ராம்சே என்பவர் காதில் விழ, பூட்டியிருந்த கதவை அவர் உடைத்து திறந்துவிட இந்தப் பெண் வெளியில் வந்துள்ளார்.
இருவரும் உடனடியாக 911 தொலைபேசி அவசர உதவி சேவைக்கு அழைக்க போலீசார் வந்து அனைவரையும் விடுவித்துள்ளனர்.
3 சகோதரர்கள் கைது: இந்தப் பெண்களை கடத்தி அடைத்துவைத்திருந்தது தொடர்பாக மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதாவர்கள் ஹிஸ்பானியர்கள் என்றும் 54,52,50 வயதுடையவர்கள் இவர்களில் ஒருவர் வாழ்ந்துவந்த வீட்டில்தான் இந்தப் பெண்கள் அடைக்கப்பட்டிருந்தனர் என்றும் கிளீவ்லண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வீட்டியில் ஆறு வயதுக் குழந்தை ஒன்றும் இருந்தது.இக்குழந்தை பற்றி எவ்வித விவரமும் போலீசார் தெரிவிக்கவில்லை.
ஆனால் தனக்கு மகள் இருப்பதாக காப்பாற்றப்பட்ட அமாண்டா பெர்ரி தெரிவித்ததாக அவரின் உறவுக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பெண்களின் உடல்நிலையில் பெரிய பாதிப்புகள் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். சாதாரணமாக இந்த மாதிரியானக் கதைகளில் இப்படியான நல்ல முடிவு இருப்பதில்லை. இவர்கள் உயிரோடும் நலத்தோடும் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என்பது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது என்று கிளீவ்லண்ட் மெட்ரோ மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஜெரால்ட் மெலொனே தெரிவித்துள்ளார்.
இதுவரை நடந்த கடத்தல்கள்: ஆனால் இப்படி பல ஆண்டுகளுக்குப் பின்னர் பெண்கள் காப்பாற்றப்பட்ட சம்பவங்களை இது நினைவூட்டுகிறது.
கலிஃபோர்னியாவில் 1991ல் காரில் கடத்திச் செல்லப்பட்ட ஜெய்சி லீ டுகார்ட் என்பவர் 18 ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பின் 2009ல் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாக காப்பாற்றப்பட்டிருதார்.
ஆஸ்திரியாவிலும் பத்து வயதில் கடத்தப்பட்ட நடாஷா கம்புஷ்ச் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் 2006ல் காப்பாற்றப்பட்டார்.
"சாதாரணமாக இந்த மாதிரியானக் கதைகளில் இப்படியான நல்ல முடிவு இருப்பதில்லை. இப்பெண்கள் உயிரோடும் நலத்தோடும் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என்பது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது" கிளீவ்லண்ட் மருத்துவர் டாகடர் ஜெரால்ட் மெலொனே.