சென்னை: பிளஸ் 2 தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ள மாணவர்கள் தங்களது வெற்றியின் ரகசியங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் நாமக்கல் வித்யா விகாஸ் பள்ளி மாணவர் ஜெயசூர்யா மற்றும் நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவர் அபினேஷ் ஆகியோர் 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். இதே போல், நாமக்கல் வித்யா விகாஸ் பள்ளி மாணவர் பழனிராஜ், மற்றும் ஓசூர் ஸ்ரீ விஜய் வித் மெட்ரிக் பள்ளி மாணவி அகல்யா ஆகியோர் 1188 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். மூன்றாவது இடத்தை நாமக்கல் மாணவர்கள் 4 பேர் உட்பட 9 பேர் பெற்றனர்.
இந்நிலையில், தங்களது வெற்றிக்கான ரகசியங்கள் குறித்து மாணவர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இதோ:
ஜெயசூர்யா: நான் அதிக மதிப்பெண் பெற்று மாநில அளவில் இடம் பிடிப்பேன் என எதிர்பார்த்தேன். அதற்கு பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஊக்குவிப்பே காரணம். அன்றைய பாடத்தை அன்றே படிப்பேன். ஆர்வத்துடன் படிக்க வேண்டும்.
மேலும், படிக்கின்ற பாடத்தை மனதில் பதிய வைத்துக்கொண்டால், 200க்கு 200 மதிப்பெண் பெற்று சாதனை படைக்கலாம். நான் மூன்றாவது படிக்கும்போது, ஒரு விபத்தில், என் தந்தை பாதிக்கப்பட்டு, படுத்தப் படுக்கையாக இருந்து வருகிறார். அதை தொடர்ந்து நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என நினைத்தேன். அதன்படி, எலும்பு மூட்டு மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய விரும்புகின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.
அபினேஷ்: வகுப்பில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொள்வேன். இதன் காரணமாக என்னால் எளிதில் பாடங்களை மனிதில் பதிய வைத்துக்கொள்ள முடிந்தது. இதுவே மதிப்பெண்கள் அதிகம் பெற காரணம். அதே போல், காலை 4 மணிக்கே எழுந்து படிக்க ஆரம்பித்து விடுவேன். கடந்த ஓராண்டாக டி.வி.,பக்கமே சென்றதில்லை. கிரிக்கெட் என்றால் எனக்கு மிகவும் உயிர். ஓய்வு நேரங்களில் கிரிக்கெட் விளையாடி ரிலாக்ஸ் ஆவேன். அபினேஷ் தந்தை சேகர் இந்தியன் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிகிறார். அவரது தாயார் லதா, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவர்களது சொந்த ஊர் திண்டுக்கல் அருகேயுள்ள குள்ளனம்பட்டி.
அகல்யா: மாநில அளவில் 2வது இடம் பிடித்தது தனது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது வெற்றிக்கு, நான் படித்த பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் எனது பெற்றோர் மிகுந்த ஊக்கம் அளித்தனர். அவர்களுக்கு எனது நன்றி.
பழனிராஜ்: நெல்லையை சேர்ந்த மாணவன், பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். திருநெல்வேலியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்கின் மண்டல அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றுபவர் சுரேஷ்குமார். இவரது மகன் பழனிராஜ். திருச்செங்கோடு, வித்ய விகாஷ் பள்ளியில் பிளஸ் டூ பயின்றார். ஆயிரத்து 188 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். நெல்லை கொக்கிரகுளத்தில் வசிக்கும் சுரேஷ்குமார், தாயார் சுகந்தி, அக்காள் திவ்யா ஆகியோர் பழனிராஜை பாராட்டினர்.
தமது வெற்றி குறித்து பழனிராஜ் கூறியதாவது: திருச்செங்கோடு பள்ளியில், அனைத்து பாடங்களையும் நன்றாக சொல்லிக்கொடுத்தார்கள். நானும் புரிந்துபடித்தேன். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து படிப்பேன். தினமும் குறைந்தபட்சம் ஐந்து மணிநேரம் படிப்பேன். மருத்துவ கல்லூரியில் சீட் பெற வேண்டும் என்பதற்காக, நான்கு பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு படித்தேன். அதே போல தற்போது மதிப்பெண் பெற்றுள்ளேன். சென்னை மருத்துவ கல்லூரியில், இதயநோய் டாக்டருக்கு படிப்பேன் என்றார். இவரது சொந்த ஊர் விருதுநகர். அங்குள்ள சுலோசனா நாடார் தெருவில், காமராஜர் வீட்டிற்கு அருகில்தான் எங்கள் என வீடு என மகிழ்ச்சியோடு தெரிவித்த அவர், தந்தை திருச்செங்கோட்டில் வங்கியில் பணியாற்றிதால், அங்கு படித்ததாக தெரிவித்தார்.