டமாஸ்கஸ்: சிரியாவில் அதிபர் ஆசாத்தின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 50 பேர் பலியாகினர்.
சிரியா நாட்டில் அதிபர் பஷீர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்ரனர். போராட்டக்காரர்களை ராணுவம் ஒடுக்கி வருகின்றது. மேலும் அதிபரின் ஆதரவாளர்கள் சீருடை அணியாத ராணுவத்தினராக செயல்பட்டு போராட்டக்காரர்களை தாக்கி வருகின்றனர்.
அதிபரின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்து வரும் மோதல்களில் இதுவரை 70,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் பைதா மாகாணத்தின் கடற்கரையோர கிராமம் ஒன்றுக்குள் நேற்று அதிபரின் ஆதரவாளர்கள் நுழைந்து அங்கிருந்த வீடுகளுக்கு தீ வைத்தனர்.
இதையடுத்து வீடுகளுக்குள் இருந்த பெண்களும், குழந்தைகளும் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர். அப்படி வெளியே வந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோரை ஆசாத் ஆதரவாளர்கள் கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்தனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.