மும்பை: ஐ.பி.எல் ஸ்பாட் ஃபிக்சிங் புகாரில் ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டு சிறை சென்றதற்கு பாலிவுட் நடிகை சுர்வீன் சாவ்லா அதிர்ச்சியடைந்துள்ளார்.
வசந்த் இயக்கத்தில் வெளியான மூன்று பேர் மூன்று காதல் படத்தில் நடித்தவர் சுர்வீன் சாவ்லா. இவர் பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். டிவி ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உடன் இணைந்து நடனமாடியுள்ளார். இதனால் இருவருக்கும் காதல் அரும்பியதாகவும் செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில் ஐ.பி.எல் சூதாட்டப் புகாரில் சிக்கை கைதானார் ஸ்ரீசாந்த்.
இந்த சம்பவம் பற்றி செய்தியாளர்கள் சுர்வீன் சாவ்லாவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்த் கைதான தகவல் வந்தபோது நான் கேன்ஸ் படவிழாவில் இருந்தேன். அவர் மீதான குற்றச்சாட்டுகள் எனக்கு அதிர்ச்சி அளித்தன.
ஸ்ரீசாந்தும் நானும் நண்பர்களாக இருந்தோம். ஆனால் சமீபகாலமாக அவருடன் நான் தொடர்பில் இல்லை.
ஸ்ரீசாந்த் கேரள மக்களை கிரிக்கெட்டுக்கு கொண்டுவர ஒரு உந்துதலாக இருந்தார். பணத்தாசை மனிதர்களை எப்படியெல்லாமோ குப்புற தள்ளிவிடுகிறது. இந்த சம்பவம் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார் சுர்வீன் சாவ்லா.