விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், காடுவெட்டி குரு எம்.எல்.ஏ, பாமக தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால் வடமாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மரக்காணத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, விழுப்புரத்தில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ராமதாஸ், ஜி.கே. மணி மற்றும் அவர்களுடன் கைது செய்யப்பட்டவர்கள் எட்டு அரசுப் பேருந்துகள் மற்றும் காவல்துறை வாகனங்களில் இன்று அதிகாலை 4 மணிக்கு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ராமதாஸ் உள்ளிட்டோர் மீது மரக்காணம் கலவரம் தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில் பாமக எம்எல்ஏ காடுவெட்டி குரு கைது
இதனிடையே பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி ஜெ.குரு சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை மே 3-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி எம்எல்ஏ விடுதியில் தங்கியிருந்த போது, காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு விழா பொதுக்கூட்டத்தில், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால், தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்து, கைது செய்துள்ளதாக குரு தெரிவித்துள்ளார்.
வட மாவட்டங்களில் பதற்றம்
இதனிடையே, ராமதாஸ், காடுவெட்டி குரு, ஜி.கே.மணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் அவர்களை விடுதலை செய்யக் கோரியும் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதே போல், காஞ்சிபுரம், கடலூர், அரியலூர் மாவட்டங்களிலும் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டது. கிராமப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகள் பல இடங்களில் நிறுத்தப்பட்டன.கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரிலும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. ஒரு சில இடங்களில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றன.
கோயம்பேடு பேருந்துகள் நிறுத்தம்
மேலும் பாமகவினரின் மறியலால் சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு நேற்று இரவு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.