மாமல்லபுரம்: பாமகவின் சட்டசபை உறுப்பினரும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு, சாதி வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர் மீது பழைய வழக்குகள் தூசு தட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் உள்ளே தள்ளப்பட்டுள்ளார்.
மாமல்லபுரத்தில் அப்படி என்னதான் காடுவெட்டி குரு பேசினார்? இதுதான் அவருடைய பேச்சின் சுருக்கம்:
எங்க நோக்கம் கோட்டையை கைப்பற்றத்தான். கலவரம் செய்றது எங்க நோக்கமில்லே. நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது. எங்களை அடக்குவதற்குக் காவல் துறையும் பத்தாது. நாங்கள் ஒன்றுசேர வேண்டும் என்று சொன்னால், ஒரு சமூகத்தினர் தடைவிதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்துக்குச் செல்கின்றனர். நாங்கள் நினைத்தால், தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் மாநாடு நடத்த முடியாது. பொதுக்கூட்டம் போட முடியாது.
5 முறை கருணாநிதி முதல்வரு, 3 முறை ஜெயலலிதா முதல்வரு. நீங்க சாதியை ஒழிக்க வேண்டியதுதானே? காதல் என்ற பெயரில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவன் மற்ற சமூகப் பெண்களிடம் அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டு வருகிறான். அவனால் ஏற்பட்டதுதான் தர்மபுரி கலவரம்.
கலப்புத் திருமணம் செய்தால்தான் சாதி ஒழியும் என்று சொல்கிற நீங்கள், உங்கள் தலித் பிரிவில் இருக்கிற சாதிகளுக்குள்ளேகூட பெண் கொடுத்துப் பெண் எடுப்பது இல்லையே. அங்கே என்ன தடுக்குது? சாதிதானே தடுக்குது. நாங்க வேணாம்னு சொன்னோமா?.
எத்தனை வழக்கு வேணாலும் போட்டுக்க. நாங்க பாக்காத சிறை கிடையாது. உண்மையில் வன்னியர்களுக்கு சாதி உணர்வே கிடையாது. அந்த உணர்வு இருந்திருந்தா தமிழ் நாட்டுல வன்னியன்தான் முதல்வரா இருந்திருப்பான்.
நாம் ஒண்ணா இருப்போம் கை கொடுன்னு அய்யா சொன்னாரு. கையைக் கொடுன்னா உன் பொண்ண கொடுங்கிறான். சாராயக் கடைகளைத் திறந்து எங்கள் சாதிக்காரனைக் குடிகாரனா மாத்திட்டீங்க. இதைத் தட்டிக்கேட்டதால், எங்க ஐயாவை மதுரைக்குப் போகக் கூடாது; தர்மபுரிக்குப் போகக் கூடாதுனு தடை போடறீங்க. அந்தத் தடையை உடைச்சுக்கிட்டு போக ரொம்ப நேரம் ஆகாது. எங்களுக்குத் தடை போட ஐயா ஒருத்தரால்தான் முடியும். ஐயா ஒரு வார்த்தை சொன்னா, தமிழ்நாடே அசையாது.
1981 முதல் 1987 வரை காவல் துறை அனுமதி கொடுக்க மறுத்தாலும் அதை மீறித்தான் கூட்டம் நடத்தினோம். அதை செய்ய இப்பவும் எங்களால முடியும். எங்களுக்கு தடை போடுறீங்களா? இப்போ, வன்னியர் வன்னியர்னு நல்லா கோஷம் போடுறீங்க. ஆனா எப்ப சாதிய நினைக்கணுமோ அப்ப மறந்துடுறீங்க, அதனால் மத்தவன் ஆட்சிக்கு வர்றான் என்றார் குரு.
இதில் மிகக் கடுமையான அவரது பேச்சுக்கள் எடிட் செய்து பிரசுரிக்கப்பட்டுள்ளது.
திருக்கச்சூர் ஆறுமுகம், அம்பத்தூர் சேகர் மீது குண்டாஸ்:
இதனிடையே பாமகவின் திருக்கச்சூர் ஆறுமுகம், அம்பத்தூர் சேகர் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களை இலக்கு வைத்து அவர்களது பழைய குற்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் உள்ளே தள்ளவும் அரசு தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இந்த இருவரும் பாமகவின் தேர்தல் நேரத்து முக்கியத் தலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.