சென்னை: சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உள்நாட்டு முனைய மேற்கூரை இடிந்து விழுந்தது.
சென்னையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த மாதம் திறக்கப்பட்ட உள்நாட்டு முனையத்தின் மேற்கூரை இன்று அதிகாலை 4 மணிக்கு இடிந்து விழுந்தது. அந்த நேரம் எந்த விமானமும் தரையிறங்காததால், புறப்படாததால் பயணிகள் தப்பினர். ஆனால் ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த விபத்தை அடுத்து ஹெச்1 மற்றும் ஹெச்2 நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளன. சென்னையின் மோசமான வானிலை காரணமாக சண்டிகர் செல்ல வேண்டிய ஜெட் ஏர்வேஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கூரை இடிந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.