ஈரோடு: கோவா விவசாயிகள் அதிகளவில் ஈரோடு மாட்டு சந்தையில் கறவை மாடுகளை வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக அதிக பட்சமாக ஒரு விவசாயி மட்டும் 100 மாடுகளை வாங்கினார்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வியாழன்தோறும் மாட்டு சந்தை நடப்பது வழக்கம். அப்போது சுற்றுவட்டாரத்தில் உள்ள ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கறவை மாடுகள், எருமை மாடுகள் போன்றவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இதனால், வெளிமாநிலங்களில் இருந்து கறவை மாடுகள், எருமை மாடுகளை வாங்க பெருமளவில் இங்கு வருகின்ரனர். வழக்கம்போல், இன்று காலை நடந்த சந்தையில் கோவா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகளும், நுகர்வோரும் வந்திருந்தனர். இங்கு செவலை மற்றும் கிராஸ் சிந்து மாடுகள் ரூ.16 ஆயிரம் முதல் 33 ஆயிரம் வரை கறவை திறனுக்கு ஏற்ப விலை வைத்து விற்கப்படுகிறது.
கோவா மாநில வியாபாரி ஒருவர் மட்டும் 100 கறவை மாடுகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாட்டு சந்தை மேலாளர் முருகன் கூறுகையில், 'கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கோவா அரசு ஈரோடு பகுதியில் இருந்து வாங்கி சென்ற கறவை மாடுகள் கோவா பகுதி சீதோஷ்ண நிலையை தாங்குகின்றன.
கூடுதல் கறவை திறனுடன் மாடுகள் பால் தருகிறது. இதையடுத்து ஈரோட்டில் இருந்து 6 ஆயிரம் கறவை மாடுகள் வாங்க கால்நடை வளர்ப்போருக்கு லோன் வழங்குவதாக கோவா அரசு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது கோவா மாநிலத்தில் இருந்து அதிகளவில் வியாபாரிகளும், நுகர்வோரும் ஈரோடு சந்தைக்கு வந்துள்ளனர்.
ஒரே வியாபாரி 100 செவலை மற்றும் சிந்து கிராஸ் மாடுகளை வாங்கியுள்ளார் என முருகன் தெரிவித்தார்.