சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் சாதி பேதத்தை ஒழிக்க சாதி விட்டு சாதி திருமணம் செய்வோருக்கு ரூ. 75,000 பரிசு அளிக்கப்படும் என்று வீரபத்திர சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் சாதி விட்டு சாதியோ, மதம் விட்டு மதமோ திருமணம் செய்தால் காப் பஞ்சாயத்தில் தண்டனை வழங்கப்படுகிறது. இந்நிலையில் அருகில் உள்ள மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் சாதி பிரச்சனையை போக்க வீரபத்திர சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சாதி விட்டு சாதி திருமணம் செய்யும் ஜோடிக்கு ரூ.75,000 பரிசு அளிக்கப்பட்டும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு திருமணம் செய்யும் ஜோடியில் ஒருவர் எஸ்.சி.யாக இருக்க வேண்டும். முன்னதாக இந்த வகை திருமணத்திற்கு ரூ.25,000 பரிசு அளிக்கப்பட்டு வந்தது.
இது குறித்து சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை சிறப்பு செயலாளர் எம்.பி. சூத் கூறுகையில்,
சாதி விட்டு சாதி திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ரூ. 25,000 பரிசுத் தொகை ஊக்கமளிப்பதாக இல்லை. அதனால் தான் அந்த தொகையை அதிகரிக்க முடிவு செய்தோம். இந்த புதிய அறிவிப்பை அடுத்து ஏராளமான இளம் ஜோடிகள் அதிலும் குறிப்பாக இளம் பெண்கள் சாதி விட்டு சாதி திருமணம் செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
புதிதாக திருமணம் செய்துள்ள சிம்லாவை சேர்ந்த அனீஷ் மற்றும் அவரது மனைவி ஸ்வேதா கூறுகையில், திருமணம் அவரவர் விருப்பம் என்றனர். வங்கியில் பணிபுரியும் அனீஷ் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தார். அவரது மனைவி ஸ்வேதா பிராமணர்.