ரியாத்: சவூதியில் ஒரு அதிகாரி, உணவு தரமற்றதாக இருந்ததாகக் கூறி, பாராபட்சம் பாராமல் தன் தாயின் உணவு விடுதிக்கே அபராதம் விதித்துள்ளார்.
வடக்கு சவூதி அரேபியாவில் உள்ள அவிக்கிலா நகரில் உள்ள உணவு விடுதியில் சாப்பிடச் சென்ற வாடிக்கையாளர் ஒருவருக்கு ரிமாறப்பட்ட 'சாண்ட் விச்'சில் செத்த ஈ கிடந்ததாம். அதைக் கண்டு திகைப்படைந்த அவர், நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
விசாரணை நடத்திய நகராட்சி தலைமை அதிகாரி ஜமால் அல் எனேசி, சுகாதாரமற்ற உணவை விற்ற உணவகத்தின் உரிமையாளரான பெண்ணுக்கு பெரிய தொகையை அபராதமாக விதித்தார்.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அந்த உணவகம் ஜமாலின் தாயாருக்கு சொந்தமானது என்பது தான். அவர் அபராதம் விதித்ததும் தன் சொந்த தாயாருக்கே.
சொந்த தாயாரின் உணவகம் என்று தெரிந்தும் உடனடி நடவடிக்கை எடுத்த ஜமாலை அவிக்கிலா மேயர் பாராட்டியுள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்ட பலரும் 'பேஸ் புக்' மற்றும் 'டுவிட்டரில்' அந்த அதிகாரியை புகழ்ந்து தள்ளியபடி உள்ளனர்.