பெங்களூர்: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 117 இடங்களில் வென்றுள்ளது. இதன்மூலம் ஆட்சியமைக்கத் தேவையான 112 இடங்களை விட காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளன.
இதனால் தேவ கெளடா அல்லது எதியூரப்பாவின் ஆதரவு இல்லாமலேயே அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.
காலையில் ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியமைக்கத் தேவையான அளவுக்கு இடங்கள் கிடைக்குமா என்பதே சந்தேகமாகவே இருந்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கை கடைசி கட்டத்தை எட்டுகையில் காங்கிரசுக்கு அதிக இடங்கள் கிடைத்துவிட்டன.
கர்நாடகத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால் 223 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடந்தது.
ஆட்சியைப் பிடிக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 117 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அடுத்த இடத்தை தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் பிடித்துள்ளது. அந்தக் கட்சி 40 இடங்களைப் பிடித்துள்ளது.
இதன்மூலம் ஆளும் கட்சியான இருந்த பாஜக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அந்தக் கட்சி 38 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 8 தொகுதிகளிலும், ரெட்டி சகோதரர்களின் வலது கரமான ஸ்ரீராமுலுவின் தனிக் கட்சி 3 இடங்களிலும் வென்றுள்ளன. மற்றவர்கள் 15 இடங்களைப் பிடித்துள்ளனர்.