டெல்லி: மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ஒன்றுக்கு 54 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது.
பெட்ரோல் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியான அடுத்த 3 மணி நேரத்தில் மானியம் அல்லாத சமையல் கியாசுக்கான விலையும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சிலிண்டர் ஒன்றுக்கு 54 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது.
மானிய சுமையை குறைப்பதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மத்திய அரசு கட்டுப்பாடு கொண்டு வந்தது. முதலில் ஒரு ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு மானிய விலையில் 6 சிலிண்டர்களே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்பட்டதையடுத்து ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர் எண்ணிக்கையை மத்திய அரசு 9 ஆக உயர்த்தியது. 9 சிலிண்டருக்கு மேல் தேவைப்பட்டால் மானியம் இல்லாத விலை கொடுத்து சமையல் கியாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதன்படி மானிய விலையிலான சிலிண்டர் ரூ.410 ஆகவும், மானியம் அல்லாத சிலிண்டர் ரூ.942 ஆகவும் கொடுக்கப்பட்டு வந்தது.
கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சி காரணமாக மானியம் அல்லாத சமையல் கியாஸ் சிலிண்டருக்கான விலையும் குறைக்கபட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி ரூ.38 குறைக்கப்பட்டது. ஏப்ரல் 1-ந்தேதி 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த மாதம் 54 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மானியம் அல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் மீதான விலை இந்த மாதம் தான் அதிக அளவில் குறைக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு மற்ற அத்தியாவசியப் பொருட்களைவிட சமையல் கியாசுக்குத்தான் அதிக அளவில் மானியம் வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.