சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ.வும் வன்னியர் சங்கத்தின் தலைவருமான காடுவெட்டி ஜெ. குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடலூரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பழைய வழக்கு ஒன்றில் தேடப்படும் குற்றவாளி என அறிவித்து சென்னை எம்.எல்.ஏ. விடுதியில் பாமகவின் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டார். அவர் மீது வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அடுத்தடுத்து போடப்பட்டது. அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.பின்னர் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அன்புமணிக்கு அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்து நேற்று வெளியே வந்தார். இன்று ஆளுநரை நேரில் சந்தித்து எங்கள் மீது தொடர்ந்தும் வழக்குப் போடுகிறார்கள் என்று புகார் மனு கொடுத்துவிட்டு வந்தார். அதே நேரத்தில் ராமதாஸுக்கும் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததால் அவர் நாளை விடுதலையாகக் கூடும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு சென்னை புழல் சிறையில் உள்ள குருவிடம் இன்று வழங்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.