கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றம் கடந்த மாதம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 222 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடக்கிறது.
இத்தேர்தலில், ஆளும் தேசிய கூட்டணியும், எதிர்க்கட்சியான மக்கள் கூட்டணியும் போட்டியிடுகின்றன. தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில் இன்று ஓட்டு பதிவு நடக்கிறது. பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர்.
மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து தேசிய கூட்டணி கட்சி கடந்த 56 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால், இந்த தடவை போட்டி கடுமையாக உள்ளது. இருந்தாலும் 'இந்த முறையும் வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்போம்' என பதவி விலகிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியான மக்கள் கூட்டணியின் தலைவர் அன்வர் இப்ராகிம் கூறும் போது, 'தேசிய கூட்டணி மீது ஊழல் புகார் உள்ளது. எனவே, பொதுமக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். எனவே, இந்த தடவை நாங்கள் வெற்றி பெறுவோம்' என கூறியுள்ளார்.
எனவே, மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் முடிவுகள் இன்று இரவுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.