வேலூர்: பாமக நிறுவனர் ராமதாஸ், குரு கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் நடத்திய வன்முறையில் தீக்கிரையான கண்டெய்னர் லாரி டிரைவர் நேற்று உயிரிழந்தார். இதுவரை இரண்டு லாரி டிரைவர்கள் உயிரிழந்துள்ளதால் சிறையில் உள்ள ராமதாசுக்கு சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது.
பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் நடத்திய, சித்திரை இளைஞர் விழாவை முன்னிட்டு நடந்த சம்பவங்களுக்கு, நீதிவிசாரணை கோரி, ஆர்பாட்டம் நடத்த முயன்ற, பா.ம.க., நிறுவனர் ராமதாசை கடந்த மே 1ம் தேதி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, பா.மக.,தலைவர் மணி, வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கண்டெய்னர் லாரி சாம்பல்
ராமதாஸ் கைதை கண்டித்து, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கலவரம் ஏற்பட்டது. திருவண்ணாமலை, அத்தியந்தல் ஏரிக்கரை அருகே இம்மாதம், 2ம் தேதி, அரியானா மாநிலத்தில் இருந்து கடலூருக்கு, "ஹீரோ பேஷன்' பைக்குகள் ஏற்றிய கன்டெய்னர் லாரி, மீது மர்ம கும்பல், பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில், லாரி மற்றும் அதிலிருந்த பைக்குகள் முற்றிலும் சேதமடைந்ததுடன், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சாகர் கான், 25, படுகாயமடைந்தார். வேலூர், சி.எம்.சி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் நேற்று அதிகாலை, 2 மணிக்கு சாகர் கான் பரிதாபமாக இறந்தார்.
ராமதாஸ் பதில் சொல்வாரா?
சாகர் கானுக்கு மிஸ்சி என்ற மனைவியும், பாபு பைரோவு என்ற மகனும் உள்ளனர். இறந்த டிரைவர் சாகர் கானின் தம்பிகள் அக்தர் கான், சேம்னா அக்தர், ரபிர் கான் ஆகியோர் சாகர் கானின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
அப்போது பேசிய சாகர் கானின் தம்பி அக்தர் கான், அரசியல் கலவரத்தில் சாகர் கான் இறந்ததை கேட்டு அரியானாவில் உள்ள மக்கள் கொதித்துப் போய் உள்ளனர். ஒரு பாவமும் அறியாத சாகர் கான் மரணத்துக்கு ராமதாஸ் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும் என்றார்.
கொலை வழக்காக மாற்றம்
திருவண்ணாமலையில் லாரி எரிக்கப்பட்ட சம்பவத்தில் மட்டும், பா.ம.க.,வைச் சேர்ந்த, 12 பேரை கைது செய்துள்ளனர். தற்போது லாரி டிரைவர் பலியாகியுள்ள நிலையில், இவர்கள் மீதான வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட உள்ளது. சில பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில், இதுவரை, 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. சில சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கல்வீச்சில் இறந்த டிரைவர்
இதனிடையே விழுப்புரம் மாவட்டம் முருக்கேரியை சேர்ந்த பன்னீர் செல்வம் கடந்த 4ம் தேதி மரக்காணத்தில் இருந்து உப்பு ஏற்றிக்கொண்டு திண்டிவனம் வந்தார். உப்பை இறக்கிவிட்டு மீண்டும் மரக்காணம் திரும்பிய போது அடையாளம் தெரியாத நபர்கள் பன்னீர் செல்வம் ஓட்டி வந்த லாரி மீது கற்களை வீசி தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பிரம்மதேசம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
560 வாகனங்கள் சேதம்
கலவரம் துவங்கியதில் இருந்து நேற்று வரை, 560க்கும் மேற்பட்ட வாகனங்கள் தாக்குதலில் சிக்கியுள்ளன. 15 அரசு, தனியார் வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. மரங்களும் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன. 16 வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. செஞ்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை பஸ் டிப்போக்களில், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடடைகள் நான்கின் மீதும், பெட்ரோல் குண்டுகளால் தாக்குதல் நடந்தது. பெட்ரோல் குண்டுகள் வீசியது உள்ளிட்ட வழக்குகளின் கீழ், 5,300க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முதல்வர் நிவாரணம்
இதனிடையே மரணமடைந்த சாகர் கான் குடும்பத்திற்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, ஐந்துலட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதே போல், ஏற்கனவே, திண்டிவனத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த லாரி ஓட்டுனர் பன்னீர் செல்வம் குடும்பத்திற்கும், ஐந்து லட்சம் ரூபாய் நிதி வழங்கவும் முதல்வர், உத்தரவிட்டுள்ளார்.