திருவனந்தபுரம்: அமெரிக்க மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனமான ஆம்வேயின் இந்திய தலைமை செயல் அதிகாரி ஸ்காட் பின்க்னே மற்றும் 2 நிர்வாக இயக்குநர்கள் மோசடிப் புகாரில் கேரள மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த விசாலாட்சி என்பவர் தாம் ஆம்வே பொருட்களை விற்பனை செய்ததில் சுமார் ரூ3 லட்சம் நட்டம் ஏற்பட்டது என்று போலீசில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ரூ37 மதிப்புள்ள பொருளை ரூ395க்கு ஆம்வே நிறுவனம் விற்பனை செய்ததும் இந்த விசாரணையில் தெரியவந்தது. ஆம்வே நிறுவனத்தின் மோசடிகள் தொடர்பாக வழக்குகளில் ஆம்வே தலைமை செயல் அதிகாரி ஸ்காட் முன்ஜாமின் பெற்றிருந்தார்.
இந்நிலையில் இரு மோசடி வழக்குகளில் கேரள மாநிலம் வயநாட்டில் ஸ்காட் மற்றும் அந்நிறுவன இயக்குநர்கள் சஞ்சய் மல்கோத்ரா மற்றும் அஞ்சு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ரூ. 2.5 கோடி மதிப்பிலான ஆம்வே பொருட்கள் குடோன்களில் இருந்தும் பறிமுதல் செய்யபட்டன. ஆம்வே நிறுவனத்தின் இன்சூரன்ஸ் திட்டம் தொடர்பாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாகவும் கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்