சென்னையில் சிறுவன் நரபலி - உறவுக்கார பெண் கைது : குடுகுடுப்பை காரனுக்கு போலீஸ் வலை வீச்சு

சென்னையில், மர்மமான முறையில் இறந்த சிறுவன், நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தே கத்தில், அச்சிறுவனின் உறவுப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். பலி கொடுக்க தூண்டிய, குடுகுடுப் பை காரனை, போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னை, வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்தவர் செந்தில், 29; இவரது மனைவி கீதா, 25. இவர்களது இரண்டரை வயது மகன் ஜிஸ்னு. கடந்த, 9ம் தேதி ஜிஸ்னு பக்கத்து வீட்டு மொட்டை மாடியில், தண்ணீர் நிறைந்த வாளியில் தலைக்குப்புற கவிழ்ந்த நிலையில் கிடந்தான். சிறுவனை மீட்ட உறவுப் பெண் மகேஸ்வரி, பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சிறுவன் இறந்துவிட்டது தெரியவந்தது. இதை யடுத்து, அங்கிருந்து சிறுவன் உடலை வீட்டுக்கு கொண்டு வந்த பெற்றோர், போலீசுக்கு தகவல் அளிக்காமல் இறுதிச்சடங்கை செய்து முடிக்க திட்டமிட்டனர்.
சுடுகாட்டில், சிறுவன் இறந்ததற்கான மருத்துவ கடிதம் கேட்ட போது, வியாசர்பாடியில் உள்ள தனியார் மருத்துவரை அணுகி கடிதம் பெற்று, சிறுவன் ஜிஸ்னுவின் உடலை எரித்துவிட்டனர்.

சம்பவம் நடந்த இரண்டு நாட்கள் கழித்து கீதாவின் பக்கத்து வீட்டில் வாடகைக்கு வசிக்கும், சையத் சோபியா என்பவர், ஜிஸ்னுவை மகேஸ்வரி தான் தண்ணீர் மூழ்கடித்து கொன்றதாக, சிறுவனின் உறவினர்களிடம் தெரிவித்தார்.
சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மகேஸ்வரியை பிடித்து, எம்.கே.பி., நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையின் போது முதலில் மறுத்த மகேஸ்வரி, இறுதியில், உதவி கமிஷனர் மனோகரன் நடத்திய விசாரணையில், குற்றத்தை ஒப்புக் கொண்டார். மகேஸ்வரி, சிறுவனை கொலை செய்தது குறித்து, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

செந்தில், கீதா தம்பதியினரிடம் நெருக்கமாக பழகி வந்த மகேஸ்வரி, சண்டையால் பிரிந்துவிட்டார். கடந்த, 7ம் தேதி, அப்பகுதிக்கு வந்த குடுகுடுப்பைகாரன், மகேஸ்வரியிடம், உனக்கு யாரோ சூனியம் வைத்துள்ளனர். அதை எடுக்க, 2,000 ரூபாய் செலவாகும்' என, கூறியுள்ளார்.
மகேஸ்வரியும், 1,000 ரூபாய் கொடுத்துள்ளார். குடுகுடுப்பைகாரனோ, எலுமிச்சை பழம், தாயத்து மற்றும் குங்குமத்தை, மகேஸ்வரியிடம் கொடுத்துவிட்டு, "இதை வைத்து பூஜை செய்து, ஏதாவது பலி கொடு' என, கூறி சென்றுள்ளான்.
அடுத்த இரு தினங்களில், ஜிஸ்னுவை வீட்டிற்கு அழைத்துச் சென்ற மகேஸ்வரி, அவனின் கழுத்தை நெரித்து பின், தண்ணீர் நிறைந்த பிளாஸ்டிக் தொட்டியில் மூழ்கடித்து கொன்றுள்ளார்.

சந்தேகம் வராமல் இருக்க, ஜிஸ்னுவை ஒரு துணியில் போர்த்தி, பக்கத்து வீட்டில் வசிக்கும் சோபியா வீட்டின் மாடிக்கு சென்று, அங்குள்ள சிறிய பிளாஸ்டிக் வாளியில், சிறுவன் ஜிஸ்னுவை தலைகீழாக கவிழ்த்துவிட்டு, யாருக்கும் தெரியாதது போல் இருந்துவிட்டார்.
இதை, தூக்கக் கலக்கத்தில் இருந்த சோபியா, ஜன்னல் வழியாக பார்த்து, மகேஸ்வரி, ஏதோ துணி துவைப்பதாக எண்ணி பேசாமல் இருந்து விட்டார். பின் வெளியே வந்தபோது, கதவை மகேஸ்வரி திறந்ததையும், பிளாஸ்டிக் வாளியில், சிறுவனின் கால் தெரிவதையும் பார்த்து அதிர்ச்சியானார்.

அப்போது மகேஸ்வரி, சிறுவன் தவறி வாளியில் விழுந்ததாக கூறி நாடகமாடியுள்ளார். இதை உண்மை என, நம்பிய செந்தில், கீதா தம்பதியர், போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல், போலி மருத்துவ சான்றிதழ் வாங்கி, இறுதிச்சடங்கு செய்து முடித்துள்ளனர்.
இச்சம்பவத்தில், குடுகுடுப்பைகாரன் சொன்னதற்காக, சிறுவனை, மகேஸ்வரி பலி கொடுத்தாரா அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்தாரா, என, எம்.கே.பி., நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், போலி மருத்துவ சான்றிதழ் கொடுத்த மருத்துவர், குடுகுடுப்பைகாரன் குறித்தும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: