திருவனந்தபுரம்: கேரள குடும்பத்துக்குச் சொந்தமான செளதி அரேபிய கரூவூலத்தில் உள்ள ரூ. 5,000 கோடியை மீட்க கேரள அரசு சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளது.
இது குறித்து கேரள மாநில சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் நசீகர் கூறியதாவது:
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த கெயி குடும்பத்தினர் 136 ஆண்டுகளுக்கு முன் புனித மெக்கா நகரில் ஒரு இடத்தை வாங்கினர். அங்கு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்காக ஒரு இருப்பிடத்தைக் கட்டினர்.
1950ம் ஆண்டு மெக்கா நகரை மேம்படுத்தவும், புனித யாத்ரீகர்களுக்கான தங்குமிடங்களை விரிவாக்கவும் கெயி குடும்பத்தினரின் இடத்தை செளதி அரசு கையகப்படுத்தியது. இதற்காக அந்தக் குடும்பத்தினருக்கு ரூ. 1.98 கோடியை (1.4 million Saudi riyals) நிவாரணமாக வழங்கியது.
இந்தப் பணம் செளதி அரேபிய கரூவூலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பணத்தை கெயி குடும்பத்தினரால் பெற முடியவில்லை. இப்போது அந்தப் பணத்தின் மதிப்பு ரூ. 5,000 கோடியாகிவிட்டது.
செளதி சட்டப்படி இந்தக் குடும்பத்தினர் இந்தப் பணத்தைப் பெற்றால் அதை செளதியிலேயே தான் செலவு செய்ய முடியும். இந்தப் பணத்தை வைத்து புனிதப் பயணிகளுக்காக பெரிய அளவில் தங்குமிடம் கட்டித் தர முடியும்.
2001ம் ஆண்டு முதல் கெயி குடும்பத்தினர் இந்தப் பணத்தை செளதி கருவூலத்தில் இருந்து பெற முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால், அதைப் பெற முடியவில்லை. இதையடுத்து இது குறித்து கெயி குடும்பத்தினருக்கு உதவ அப்போதைய கேரள முதல்வராக இருந்த ஏ.கே.ஆண்டனி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இப்போதைய உம்மன் சாண்டி அரசும் இந்த விஷயத்தில் மத்திய அரசு- செளதி அரசுடன் பேச ஒரு சிறப்பு அதிகாரியையும் நியமித்துள்ளது.
இவ்வாறு நசீர் கூறினார்.
இந்த விவகாரத்தையே நசீர் தனது பி.எச்டி படிப்புக்கான கருவாக வைத்து ஆய்வறிக்கையும் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.