கரூர்: கரூர் மாவட்டம் சூரிப்பாளையத்தில் 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 7 வயது சிறுமியை மீட்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் பாதிரிப்பட்டியை அடுத்த சூரிப்பாளையத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் தனது மகளுடன் முருங்கைக்காய் பறிக்க தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிறுமி 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து முத்துப்பாண்டியன் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு 3 பொக்லைன் இயந்திரங்களை வரவழைத்து குறுக்குவெட்டு பகுதியில் குழி தோண்டி சிறுமியை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாறைகள் நிறைந்த பகுதியாக இருப்பதால் மீட்பு பணியில் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. சிறுமிக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.