திருவண்ணாமலை: இதுவரை நீலம், லைலா, நர்கீஸ், தானே என்ற பெயர்களில் நம்மைத் தாக்கிவிட்டுப் போயின புயல்கள். இந் நிலையில் அடுத்து வரப் போகும் புயலுக்கு மகேசன் என்று பெயரிடப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடல், அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கான பெயர்களை இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 நாடுகள் இணைந்து சூட்டுகின்றன. ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் தலா 8 பெயர்கள் அடங்கிய பட்டியலை ஜெனிவாவில் உள்ள உலக வானிலை கழகத்தில் தரப்படும்.
இந்தப் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு வங்கக் கடல், அரபிக் கடலில் ஏற்படும் புயலுக்கு ஒவ்வொரு நாடும் தந்த பெயர்கள் வரிசைப்படி சூட்டப்படும். இந்த வகையில் அடுத்து வரப் போகும் புயலுக்கு மகேசன் என்ற பெயர் சூட்டப்படவுள்ளதாம். இது இலங்கை சூட்டிய பெயராகும்.
இத்தகவலை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார். திருவண்ணாமலையில் ஒரு பொறியியல் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
வானிலை ஆய்வுக்குப் பயன்படும் வகையில் இப்போது, தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே ரேடார் மையம் உள்ளது. கூடுதலாக காரைக்காலில் ரேடார் மையம் அமைக்கப்படும். கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, ரேடார் கருவியும் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த மையம் செயல்படத் தொடங்கும்.
அதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் புல்லாங்குடியில் ரேடார் மையம் அமைக்கவும் இடத்தை தமிழக அரசு ஒதுக்கித் தந்துள்ளது. இங்கு, எதிர்காலத்தில் ரேடார் மையம் அமைக்கப்படும்.
காரைக்காலில் அமைக்கப்படும் ரேடார் மையம் மூலம் மேலும் கூடுதலாக சுமார் 400 கி.மீ. தூரத்துக்கு வானிலை நிகழ்வுகளை ஆய்வு செய்ய முடியும். இனி வங்கக் கடல், அரபிக் கடலில் ஏற்படும் புயலுக்கு மகேசன் என்று பெயர் வைக்கப்படும். இது, இலங்கை வைத்த பெயர் என்றார் ரமணன்.