மும்பை: மும்பையின் தானேயில் புதிதாக கட்டப்பட்டு வந்த 7 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.
தானே பகுதியில் புதிதாக 7 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. அதில் 4 மாடிகளில் 35 குடும்பங்கள் வசித்து வந்தனர். மேலும் 3 மாடிகளைக் கட்டும்பணியில் கட்டிடத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் திடீரென 7 மாடிக் கட்டிடமும் அப்படியே நொறுங்கி விழுந்தது போல சரிந்தது. இதில் 35 குடும்பத்தினரும் கட்டிடத் தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர்.
நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மீட்பு பணி இன்றும் நீடித்து தற்போது நிறைவடைந்துள்ளது. 7 மாடி கட்டிடமும் அப்படியே நொறுங்கி, கான்கிரீட் தூண்கள் ஒன்றன் மீது ஒன்று விழுந்து கிடந்ததால் அவற்றை அகற்ற மீட்புக்குழுவினர் கடுமையாக போராடவேண்டியதிருந்தது. ஒவ்வொரு பகுதியும் அகற்றப்பட்ட போது குவியல், குவியலாக பிணங்கள் மீட்கப்பட்டன. இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்து கொண்டிருந்தவர் களும் உயிருடன் மீட்கப்பட்டனர். படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் தானே கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து தற்போது 72 ஆகியிருக்கிறது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோருக்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில முத்ல்வர் பிருதிவிராஜ் சவான் அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இந்த விபத்தைத் தொடர்ந்து விபத்து நடந்த இடம் அருகே கட்டப்பட்ட கட்டிடமும் இன்று மாலை இடித்து தள்ளப்பட இருக்கிறது.
