டெல்லி பாலியல் பலாத்காரம் அனைவரின் கண்களையும் திறந்து விட்டுள்ளது - பிரதமர்

 Delhi Gang Rape Initiated Introspection Says Pm டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவம் நாட்டு மக்கள் அனைவரின் கண்களையும் திறந்து விட்டுள்ளது. அனைவரும் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். 

டெல்லியில் இன்று முதல்வர்கள், நீதிபதிகள், சட்ட நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த மாநாட்டில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமை தாங்கினார். மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்... 

நமது நீதித்துறையின் செயல்பாடுகளையும், நீதி வழங்கும் திறமையையும் மேம்படுத்திக் கொள்ள முதல்வர்களுக்கும், நீதித்துறையினருக்கும் இந்த மாநாடு ஒரு அருமையான வாய்ப்பாகும். 

மக்களின் சுதந்திற்கு எந்த ஒரு பங்கமும் வராத வகையில் நமது சட்டம் மிகச் சிறப்பான வசதிகளுடன் இருப்பது நமது அரசியலமைப்பின் பலமாகும். நீதித்துறையினர் இந்த நாட்டுக்காக ஆற்றி வரும் பங்களிப்புக்காக அவர்களைப் பாராட்டுகிறேன். 

மனித உரிமைகள் சிக்கலுக்குள்ளாகும்போது அவை காப்பாற்றப்பட வேண்டும், நிலை நிறுத்தப்பட வேண்டும். 

தற்போது நீதித்துறை சீர்திருத்தங்கள் குறித்த கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. எனவே இதுபோன்ற சந்தர்ப்பத்தில் நீதியானது எந்த ஒரு நிலையிலும், இடத்திலும் பலி கொடுக்கப்படவில்லை என்பதை நாம் நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. 

டெல்லியில் நடந்த மிகக் கொடுமையான பாலியல் பலாத்காரச் செயல் அனைவரின் கண்களையும் திறந்து விட்டது. மேலும் அனைவரும் தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் நீதித்துறையின் செயல்பாடும் தற்போது பெரும் கவனிப்புக்குள்ளாகியுள்ளது. 

இந்திய நீதிமன்றங்களில் 3 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் குவிந்து கிடக்கின்றன. இதை பெருமளவில் குறைக்க வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் நான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துடன் ஒத்துப் போகிறேன். 

இருப்பினும் இதற்கான நடவடிக்கைகள் மாநில அரசுகளிடமிருந்து வர வேண்டும். அவர்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருவதில் மத்திய அரசு ஆதரவாக இருக்கும் என்றார் அவர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: